இந்தியாவின் 10 வட்டாரங்களில் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்குவதற்காக, நோக்கியா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் போதிய வருவாயின்றியும், வாடிக்கையாளர்களை இழந்தும் தவித்து வருகிறது. 4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி சேவையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 10 வட்டாரங்களில் 4ஜி சேவையைத் தொடங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
மேற்கூறிய வட்டாரங்களில் RAN தொழில்நுட்ப உதவியுடன் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இதற்காக நோக்கியா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் 3.8 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும், டேட்டா விநியோகத்தில் தங்களால் சிறப்பான சேவை வழங்க இயலும் எனவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிவேக டேட்டா சேவை வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் 5ஜி நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சி நடந்துவரும் நிலையில், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக