கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு வழங்கப்பட்ட ஒருநாள் காவல் இன்று (மார்ச் 1) மதியத்தோடு முடிவடைவதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை டெல்லி அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
கார்த்தியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்திராணி முகர்ஜி சிதம்பரத்தை நேரில் சந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் இந்தக் கைது நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது எனக் கார்த்தி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சுமீத் ஆனந்த், கார்த்தியை ஒருநாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார். இன்று (மார்ச் 1) மதியம் 12.30க்கு அவருக்கான காவல் முடிவடைகிறது. எனவே, பிற்பகலில் அவரை மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தவுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த மீண்டும் கால அவகாசம் வழங்க சிபிஐ தரப்பில் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக