காவிரி: மீண்டும் ‘87’ போராட்டத்துக்குத் தயாராகும் பாமக! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காவிரி: மீண்டும் ‘87’ போராட்டத்துக்குத் தயாராகும் பாமக!


காவிரி விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தைத் தங்கள் பக்கம் திருப்பி, மீண்டும் அரசியலில் ஓர் அதிரடியான இடத்தைப் பிடிக்கத் தயாராகிறது பாட்டாளி மக்கள் கட்சி. 1987இல் நடத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைப் போன்றே வீரியமான ஒரு போராட்டத்தை காவிரி பிரச்சினையை முன்னிட்டு மேற்கொள்ளத் தயாராகிறது பாமக.

நேற்று (பிப்ரவரி 28) சென்னையை அடுத்த வேலப்பன்சாவடி கஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானமே, ‘உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் மாதத்துக்குள் அமைக்கத் தவறினால் மக்களைத் திரட்டி தொடர் மறியல் போராட்டம்’ என்பதுதான்.

அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?

“நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இழுபறியாக இருந்து வந்த காவிரி நீர்ப்பகிர்வு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக உச்ச நீதிமன்றம் குறைத்ததைத் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கருதுகிறது. இந்த அநீதியைக் களைவதற்குச் சட்டப்படியாக நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதற்கான கெடு முடிய ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி இரு வாரங்கள் ஆகியும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்காதது கவலையளிக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் தேடும் நோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்த நினைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது’’ என்று சந்தேகம் தெரிவிக்கும் அந்தத் தீர்மானம் இதற்கான பாமகவின் போராட்ட யுக்தியை அடுத்து அறிவிக்கிறது.

“இப்பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்த யோசனையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 22ஆம் தேதி தமிழக அரசு கூட்டியதும், மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து பேசுவதெனத் தீர்மானித்ததும் மிகவும் சரியான முடிவுகளாகும்.

எனினும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் விஷயத்தில் காலம் கடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், அதற்கு முன்பாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகத் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடப்படலாம். இதைக் கருத்தில்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினோம்; தீர்மானம் நிறைவேற்றினோம் என்று அலட்சியமாக இருக்காமல் விரைவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி வலியுறுத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மார்ச் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தவறினால், அதைக் கண்டித்தும், வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கான போராட்டம் என்பதால் ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிஞ்சும் அளவுக்கு இந்த மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் பெருமளவில் பங்கேற்க பாமக பொதுக்குழு அழைப்பு விடுக்கிறது’’ என்பதுதான் இந்தத் தீர்மானம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மிஞ்சும் போராட்டம் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பொதுக்குழுவில் இதுபற்றிப் பேசிய அன்புமணி உள்ளிட்டோர், “1987இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகத் தமிழ்நாட்டையே உலுக்கிய சாலை மறியல் போராட்டம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பாமகவை ஏதோ அறிக்கை விடும் கட்சி என்று இந்தத் தலைமுறையினர் மற்ற கட்சிகளைப் போன்று நினைத்துவிடக் கூடாது. நாம் வீரியமானவர்கள் என்பதை நிரூபிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடக்கும் போராட்டத்தில் நிரூபிக்க வேண்டும். அன்று எப்படி சாலை மறியல் செய்து கோரிக்கைகளை வென்றெடுத்தோமோ அதேபோல் மீண்டும் ரோட்டில் மாட்டு வண்டிகளைக் களமிறக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நாம் களமிறங்குவோம்’’ என்று பேசியிருக்கிறார்கள்.

இதுபற்றி நாம் பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டனிடம் பேசினோம்.

“தமிழ்நாட்டு வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் போராட்டங்கள் என்றால் 1970ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கான விலையை ஒரு யூனிட்டுக்கு இரண்டு பைசா உயர்த்தியது திமுக அரசு. அப்போது அதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு மாட்டு வண்டிகளோடு சாலையில் இறங்கி கோவை மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்தார். இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் மூலம் மின்சார விலை குறைக்கப்பட்டது.

இதேபோல வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வேண்டி டாக்டர் அய்யா தலைமையில் 87ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக 1989இல் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (எம்பிசி) என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதேபோல வீரியமான போராட்டத்தைக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக முடிவு செய்துள்ளார் டாக்டர் அய்யா. இது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத போராட்டமாக, ஆனால் மத்திய மாநில அரசுகளை ஆட்டி வைக்கும் போராட்டமாக இருக்கும். வீரியமான போராட்டத்தின் மூலம் பாமக விஸ்வரூபம் எடுக்கும். பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படக் கூடாது என்பதால்தான் மார்ச் 30 வரை அரசுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறோம். பாமக முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் தமிழகத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெற்றுத் தரும்’’ என்று உறுதியாகக் கூறினார்.

1987 போராட்டம் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது. அதை மீண்டும் நினைவுபடுத்தத் தயாராகிறது பாமக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here