மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் , சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் ரோபோ தொழில்நுட்பத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. மாநில அரசு உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, சாக்கடைகளை சுத்தம் செய்யும் மனிதர்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில், 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும் வகையில், இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில், “மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துவது சமூக அவலம்” என்று குறிப்பிட்ட பினராயி, சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கினால் தான் அதனைச் சுத்தப்படுத்த முடியும் என்ற நிலையை, இந்த ரோபோ தொழில்நுட்பம் மாற்றியுள்ளது. இது ஒரு புதிய தொடக்கம். கேரளா நீர் ஆணையத்தைப் பொறுத்தவரை, இது பெருமையான தருணம். மற்ற மாநிலங்களுக்கும், பேண்டிகூட் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கேரள அரசின் இந்த முயற்சிக்குச் சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தனது பாராட்டை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இன்று பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக