குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதிச் சான்றுகள் கொடுப்பது கட்டாயமாக்கப்படுவதாகத் தனியார் பள்ளியின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2013ஆம் அண்டு தமிழகத் தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசாணை ஒன்றை அனுப்பினார் அதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்கள் விரும்பினால் சாதி, மதம் குறிப்பிடத் தேவையில்லை என்று கூறியிருந்தார். இந்த அரசாணையை 1973ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தற்போது நடைமுறையில் இருக்கிறதா என்று தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச் சங்கத்தின் கடலூர் அமைப்பாளர் பாஸ்கரிடம் கேட்டோம்.
“அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கும்போது சாதி மதச் சான்றுகளை வாங்குவதுமில்லை, கேட்பதுமில்லை எனினும் பத்தாம் வகுப்பில் சேரும்போது கட்டாயமாகச் சாதிச் சான்று கேட்கப்படுகிறது” என்றார்.
இதுகுறித்து, கடலூர் மாடர்ன் மெட்ரிக்குலேஷன் தனியார் பள்ளி உரிமையாளர் கலை.விஜயகுமார், “எல்.கே.ஜியிலேயே சாதிச் சான்று இருந்தால்தால்தான் பள்ளியில் சேர்ப்போம்” என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், “பள்ளி கல்வித் துறையினர் நினைத்தநேரத்தில் மாணவர்களின் சாதி புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையில் எஸ்.சி, எம்.பி.சி, ஒ.சி என்று கேட்பது மட்டுமல்லாமல் அதன் உட்பிரிவு சாதியைப் பற்றியும் கேட்கப்படுகிறது” என்று கூறினார்.
அரசுப் பள்ளிகளில் சாதிச் சான்று கேட்பதில்லை, தனியார் பள்ளியில் மட்டும் ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்று மாவட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஐந்து கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதியில் பின்தங்கிய மக்களை 25% சதவிகிதம் கோட்டா அடிப்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதுக்கான கட்டணத்தை ஆண்டுதோறும் அரசு செலுத்திவிடும் அதில் மோசடிகள் நடக்காமலிருக்கத்தான் சாதிச் சான்று கேட்கப்படுகிறது” என்றார்.
சாதிய பாகுபாட்டால் பலர் பாதிக்கப்படும் நிலையில் அதை ஒழிக்க முயற்சி எடுக்காமல் சலுகை என்ற பெயரில் பள்ளிகளில் சாதிச் சான்று கேட்பது வேதனைக்குரிய ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக