மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில், 3.94 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாள், சுகாதாரத் துறை சார்பில் கடந்த மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாளையொட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,400 சிறப்பு மருத்துவ முகாம்கள் மாநில அரசு சார்பில் நடைபெற்றது.
இதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், மலைவாழ் பகுதி மக்கள் உட்பட 1.58 லட்சம் பேர் இந்த முகாம்களில் பயனடைந்தனர். இதேபோன்று தாய் - சேய் நலச் சிறப்பு மருத்துவ முகாம்களில், ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 58,633 கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் விரிவான முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் நடைபெற்ற முகாம்களில், 1.77 லட்சம் பேர் பங்கேற்றுப் பயனடைந்தனர். இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 682 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த மருத்துவ முகாம்களில், தேவைப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவ முகாம்கள் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக