ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று(ஏப்ரல் 21) தனியார் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெயவிலாஸ் என்ற தனியார் பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நத்தம்பட்டி என்னும் இடத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தத் தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாயினர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இச்சம்பவம் குறித்து, பேருந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றதால்தான் இந்த விபத்து நேரிட்டது என்று பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்து நடைபெற்ற சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நத்தம்பட்டி பகுதியில் குறுகலான சாலை என்பதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக