அரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பேறுகால விடுப்பை, கடந்த ஆண்டில் இருந்து 26 வாரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை பிரசவத்திற்கு முன்பிருந்து, குழந்தைப் பிறப்பிற்கு பின்புவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிராமப்புற பகுதிகளில் குறைந்தது தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்நிலையில், பெண் மருத்துவர்கள் பணிபுரியும் 2 ஆண்டுகளில் பேறுகால விடுப்பு எடுத்திருந்தால், இந்தச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்று மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு அருகே உள்ள சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவராக ஐஸ்வர்யா என்பவர் பணிபுரிந்துவருகிறார். பணியின்போது, ஆறு மாதங்களுக்குப் பேறுகால விடுப்பில் சென்றிருந்தார். இதற்கிடையே மருத்துவ மேற்படிப்புக்கும் ஐஸ்வர்யா விண்ணப்பித்திருந்தார். இவர் பேறுகால விடுப்பு முடிந்து, மறுபடியும் பணியில் சேர்ந்தார்.
அந்த நேரத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்க அவருக்கு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. ஆனால் "பயிற்சி மருத்துவராகக் குறைந்தது 2 ஆண்டுகளாவது வேலை செய்திருக்க வேண்டும். பேறுகால விடுப்புக்குச் சென்றதால், உங்களது பணியை முழுமையாக நிறைவுசெய்யவில்லை" என்ற காரணத்தைக் கூறி மருத்துவத் துறை இயக்குநர் அவரை பணியிலிருந்து விடுவிக்க மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக, மருத்துவர் ஐஸ்வர்யா "2 ஆண்டுகளில் நான் எடுத்திருந்த பேறுகால விடுமுறையும் இதில் அடங்கும். எனவே, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இந்த விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, அரசு பெண் மருத்துவர்களும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஏப்ரல் 21) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் "பெண் ஊழியர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக