தமிழகத்தில் எடப்பாடி அணி, தினகரன் அணி என்று இருப்பது போல கர்நாடகத்திலும் அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளது. ஆனால் சற்று வித்தியாசமாக ஜெயலலிதாவால் கர்நாடக அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட புகழேந்தி இப்போது சசிகலா, தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். எனவே கர்நாடகாவில் அதிகாரபூர்வ அதிமுக யார் என்ற குழப்பம் நிலவும் நிலையில்... இன்று (ஏப்ரல் 21) அதிரடியாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கர்நாடக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அவைத் தலைவர் சம்பத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி, பொருளாளர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புகழேந்தி பேசுகையில், “கர்நாடக அதிமுகவை பொறுத்தவரைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். எங்களை அதிமுக பொதுச்செயலாளரால் மட்டுமே நீக்க முடியும். பொதுச்செயலாளர் மறைந்துவிட்டதால் எங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். வழக்கமாகப் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி மறுத்தனர். நாங்கள்தான் அதிமுக என்று கூறினர். இந்நிலையில்தான் புகழேந்தி தரப்புக்கு பதில் தரும் வகையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தலைமை இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கியது.
தமிழர் வாக்குகளைக் குறிவைத்து காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் களமிறங்கியுள்ள நிலையில் காந்திபுரம் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், ஹனூர் தொகுதியில் ஆர்.பி. விஷ்ணுகுமார், கோலார் தங்கவயல் தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் மு.அன்பு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் . இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று வெளியிட்டனர். ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி இந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக