ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஒரு லட்சம் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது!!! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஒரு லட்சம் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது!!!

ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய 
சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அசோக் நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
தனது மகனை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்க ராஜேந்திரன் அண்மையில் விண்ணப்பித்தார்.
இவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த பள்ளி முதல்வர் ஆனந்தன், ரூ.1.50 லட்சம், லஞ்சம் தந்தால் ஒன்றாம் வகுப்பில் அவரது மகனை சேர்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ரூ.1 லட்சத்தை முதல் கட்டமாக உடனே தரும்படியும், மீதி பணத்தை பள்ளியில் கட்டணமாக செலுத்தும்படியும் ஆனந்தன், ராஜேந்திரனிடம் தெரிவித்தாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், லஞ்சம் வழங்க விரும்பவில்லை. இதையடுத்து அவர், நுங்கம்பாக்கம் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் இது குறித்து புகார் செய்தார்.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில், ஆனந்தன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ஆனந்தனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, வேதிப் பொருள் தடவிய ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்து, அதை லஞ்சமாக பள்ளி முதல்வர் ஆனந்தனிடம் வழங்கும்படி கூறினர்.
இதையடுத்து ராஜேந்திரன் லஞ்ச பணத்தை வழங்குவதற்கு பள்ளி முதல்வர் ஆனந்தனை தொடர்பு கொண்டார்.
உடனே ஆனந்தன், பணத்துடன் ராஜேந்திரனை பள்ளியின் அருகே திங்கள்கிழமை இரவு வரக் கூறினார்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்தன், ராஜேந்திரனிடம் ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு புறப்பட முயன்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், ஆனந்தனை கையும்களவுமாகப் பிடித்தனர்.
சிறையில் அடைப்பு: பின்னர் ஆனந்தனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஆனந்தன், ஏற்கெனவே சில பெற்றோரிடம் இதுபோல லஞ்சம் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், ஆனந்தன் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பின்னர் ஆனந்தன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here