சர்ச்சை கருத்துக்கள்: முதல்வரை அழைத்த மோடி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சர்ச்சை கருத்துக்கள்: முதல்வரை அழைத்த மோடி


தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் குமார் தெப்பை, டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

திரிபுராவின் முதல்வராக பாஜகவின் பிப்லப் குமார் தெப் கடந்த மார்ச் 9ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற பின் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இணையம் மற்றும் செயற்கைக்கோள் வசதிகள், மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்தன. குருசேத்திர போரில் நடந்தவை குறித்து, பார்வைத்திறனற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டி சஞ்சயன் எவ்வாறு தெரிவித்தார்? அப்போது, அங்கு இணைய வசதி இருந்தது என்றுதானே அர்த்தம். இணையமும் செயற்கைக்கோளும் அந்த நேரத்தில் அங்கு இருந்தன” என்று கூறியிருந்தார்.

மேலும், தற்போதும் கம்யூட்டர் தொழில்நுட்பத்தில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாகக் கூறினார். “இணையமும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உண்டு. இந்தக் கலாசாரம் இந்தியாவுக்குச் சொந்தமானது; இதற்காக, நான் பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் பேசினார். இதனால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், “படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காகக் காத்திருக்காதீர்கள். அரசு வேலை வேண்டும் என்று அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள். சுய தொழில் தொடங்க முயற்சி செய்யுங்கள். வங்கியில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ஏழுபது ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்று, கால்நடை தொழிலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். இருபத்து ஐந்தாயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். இல்லையெனில்,பான் மசாலா கடை தொடங்குங்கள்' என்று இளைஞர்களுக்கு பிப்லப் குமார் அறிவுரை வழங்கினார்.

இதேபோல்,” மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள்., மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஆட்சி பணிக்கு சரிவரமாட்டார்கள். சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களால்தான் சமூகத்தை கட்டமைக்கத் தெரியும், அவர்களுக்குத்தான் சமூகத்தை கட்டமைக்கும் அறிவு இருக்கிறது’ என்றும் அவர் கூறினார். சமூக வலைதளங்களில் பலரும் திரிபுரா முதல்வரின் பேச்சுக்களை கிண்டல் செய்து வருகின்றார். இது பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மே மாதம் 2-ஆம் தேதி டெல்லி வந்து மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி பிப்லப் குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here