திமுக மாநிலங்களவை குழு தலைவரான கனிமொழி எம்.பி, “மத்திய அரசு 2016ஆம் ஆண்டு கொண்டுவந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் எந்த ஒரு கொத்தடிமைத் தொழிலாளரும் இதுவரை முழு இழப்பீடு பெறவில்லை என்று கூறப்படுவது உண்மையா?
குறிப்பாக தமிழ்நாட்டில் 1,500 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறக் காத்திருக்கிறார்கள் என்ற தகவல் சரியா? கடந்த மூன்றாண்டுகளில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?” என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார், “மத்திய கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டம் 2016இன்படி, விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளருக்குரிய நஷ்டஈடு தொகை அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட் மூலமாக வழங்கப்படும்.
இதற்கு முன்னதாக அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களுடன் வரைவுத் திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்படிதான் கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான மத்திய திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும்.
ஆனால், தமிழக அரசு இதுவரை கொத்தடிமை மறுவாழ்வு திட்டத்துக்கான நிதியைக் கோரி எந்த வரைவையும் அனுப்பவில்லை. மத்திய கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு நிதி என்பது அந்தத் தொழிலாளர்களைக் கொத்தடிமைக்குப் பயன்படுத்திய குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பதோடு தொடர்புடையது. எனினும், அந்த வழக்கின் தன்மையைக் கருதாது மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளருக்கு உடனடி நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க இத்திட்டம் வகை செய்கிறது.
மாநில அரசுகளிடம் இருந்து முழு வரைவு அறிக்கையும் வந்தபிறகே முழுத் தொகையும் வழங்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசம், பீகார், ஒரிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மூன்றாண்டுகளில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை மத்திய அமைச்சர் இணைத்துள்ளார். அதில் தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 32 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக