பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை - கொல்கத்தா இடையே நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில் வீரர்களை நோக்கி காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போட்டியை நடத்தவிடாமல் மைதானத்தை முற்றுகையிடப்போவதாகப் பல்வேறு அமைப்புகளும் அறிவித்தன.
அதன்படி நேற்று (ஏப்ரல் 10) மாலை 4 மணிக்கு மேல் படிப்படியாக அண்ணா சாலையில் போராட்டக்காரர்கள் குவிய ஆரம்பித்தனர். இதனால் சேப்பாக்கம் மைதானம் பகுதியிலுள்ள அனைத்துச் சாலைகளும் போராட்டக்களமாகக் காட்சியளித்தது. நாம் தமிழர், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக் குழு, டிசம்பர் 3, தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டன. பாரதிராஜா, சீமான், அமீர், ராம் உள்ளிட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி
போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதில் இயக்குநர்கள் களஞ்சியம், வெற்றி மாறன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த வெற்றி மாறன் நெஞ்சில் காவல் துறையினர் மிதித்ததாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. ‘நாங்கள் நியாயமான போராட்டம் நடத்தவே வந்தோம். ஏன் வீணாகத் தடியடி நடத்துகிறீர்கள்?’ என்று பாரதிராஜா, சீமான் ஆகியோர் காவல் துறை அதிகாரிகளைக் கண்டித்தனர்.
இதுகுறித்து வெற்றி மாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவல் துறை தாக்குதல் நடத்தியதைத்தான் நீங்கள் பார்த்தீர்களே. இதுதான் நம்முடைய உரிமை. போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதை மறித்து அடிக்கின்றனர். இந்தப் போராட்டத்தை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார். “தமிழனுக்கு இங்கு போராடக் கூட உரிமையில்லை. மாட்டை அடிப்பது போல அடிக்கிறார்கள். நெஞ்சில் எட்டி உதைக்கிறார்கள். வெற்றிமாறனை நெஞ்சில் எட்டி உதைக்கின்றனர். சாலையில் தூக்கிப் போட்டு அடிக்கின்றனர்” என்று மு.களஞ்சியம் குற்றம்சாட்டினார்.
தாக்குதலுக்குக் கண்டனம்
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும், இயக்குநர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி போராட்டத்தைத் திசை திருப்ப அதிமுக அரசு காவல் துறை மூலம் தடியடி நடத்தி, போராடியவர்களை கைது செய்திருப்பது வெட்கக்கேடானது. அதேபோல் போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் அறவழியில் நடத்தப்படும் போராட்டமே வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், “காவிரி உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும், கைது செய்வதும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தினகரன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் நியாயமான அறவழிப் போராட்டத்தை ஒடுக்க பழனிசாமியின் அரசு காவல் துறையை ஏவி கண்மூடித்தனமாக தடியடி செய்தது கண்டிக்கத்தக்கது. மேலும், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், மணியரசன், கருணாஸ், தமிமுன் அன்சாரி, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், தங்கர் பச்சான், வி.சேகர், வெற்றி மாறன், கௌதமன் மற்றும் பலரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பையும் மீறி தொடங்கியது போட்டி
தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் மீறிச் சரியாக 8 மணியளவில் போட்டி ஆரம்பித்தது. இரு அணி வீரர்களும் பாதுகாப்பாக மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்ட நிலையில், டாஸ் போட வேண்டிய நடுவர்களை அழைத்து வர மறந்தது ஐபிஎல் நிர்வாகம். இதையடுத்து 7 மணிக்கு மேல் கார் அனுப்பப்பட்டு சென்னை எழும்பூர் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நடுவர்கள் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு போட்டிகள் ஆரம்பமாகின.
காலியான கேலரிகள்
போட்டி தொடங்கிய நிலையில் அரங்கத்தின் பெரும்பாலான கேலரிகள் காலியாகவே இருந்தன. முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கப்பட்ட பந்து கேலரியில் விழுந்தது. அங்கு பறந்து விரிந்த கேமராவே கேலரிக்களில் ஆள் இல்லை என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. மீதமிருந்த கேலரிகளிலும் சொற்ப எண்ணிக்கையிலான ரசிகர்களே அமர்ந்திருந்தனர். அதாவது கேமராக்கள் அதிகமாக போக்கஸ் செய்யும் பேட்ஸ்மேனுக்கு பின்புறமும், பவுலருக்கு பின்புறமும் மட்டுமே ரசிகர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இது ஒருபுறமிருக்க, கூட்டம் இருந்த பகுதிகளை மட்டும் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், வருபவர்கள் போராட்டக்காரர்களா அல்லது ரசிகர்களா என்று தெரியாமல் காவல் துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மைதானத்துக்குள் காலணிகள் வீச்சு
போட்டி நடைபெற்றுவந்த சமயத்தில் இடையில் H கேலரியின் மேல் தளத்திலிருந்து சிலர் தாங்கள் போட்டிருந்த காலணிகளையும், டி-ஷர்ட்களையும் மைதானத்துக்குள் தூக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போட்டியானது இரண்டு நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. காலணி வீசியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எட்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக் கொடியை அசைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழக்கம் எழுப்பியவர்களையும் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி - 237, மனிதநேய ஜனநாயக கட்சி - 125, தமிழக வாழ்வுரிமை கட்சி - 75, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 63, இயக்குநர்கள் - 62, ரஜினி மக்கள் மன்றம் - 53 உட்பட 780 பேர் கைது செய்யப்பட்டதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மின்னிய மொபைல் டார்ச்சுகள்
மெரினா போராட்டத்தில் செல்போன் டார்ச் அடித்ததன் மூலம் ஜல்லிக்கட்டு குறித்த தங்களது உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தி இருந்தனர். அதுபோலவே ஐபிஎல் போட்டிக்கு நடுவே காவிரி விவகாரத்தில் ரசிகர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் செல்போனில் டார்ச் அடித்து உயர்த்திக் காண்பித்தனர். சிலர் மட்டுமே டார்ச் அடித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரங்கமே செல்போன் வெளிச்சத்தால் மின்னியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக