பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!


பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர் இன்று காலை (ஏப்ரல் 30) வைகை ஆற்றில் இறங்கினார்.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின்போது, தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முடிந்து கடந்த 15ஆம் தேதி அழகர் கோயில் கள்ளழகர் திருவிழா, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தொடங்கியது. இதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி நேற்று முன் தினம் (ஏப்ரல் 28) புறப்பட்டு நேற்று காலை (ஏப்ரல் 29) மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை எதிர்சேவையாக வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து புதூர் மாரியம்மன், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில்களுக்குச் சென்ற அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்த அவரை பக்தர்கள் நாட்டுச்சர்க்கரை நிரப்பப்பட்ட செம்பில் சூடம் ஏற்றி வரவேற்றனர். இரவு சிறப்பு அலங்காரத்திற்குப் பின்பு கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அணிவிக்கப்பட்டது. இரவு முழுவதும் பக்தர்களுக்கு கள்ளழகர் தரிசனம் தந்தார்.

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆறு நோக்கிப் புறப்பட்டார். தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு பச்சைப் பட்டுடுத்தி அதிகாலை 3 மணிக்கு கள்ளழகர் புறப்பட்டார். காலை 5.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் வீரராகவப் பெருமாளை கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் 3 முறை சுற்றிவந்தார். அங்கு திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.அதன் பிறகு கள்ளழகர் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்குச் சென்றார்.

நீண்ட தொலைவு பயணம் செய்து வந்த அழகரை குளிர்விக்கும் வகையில் கள்ளழகர் வேடம் அணிந்த திரளான பக்தர்கள் அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதற்காக, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்ததால், மக்கள் வெள்ளத்தில் மதுரை தத்தளித்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 5,000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here