இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அகில இந்திய மாநாடும் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கொள்கை முடிவுகளும்.............. காங்கிரஸ் கட்சியின் வர்க்கச் சார்பு பற்றிய நிலைப்பாடு சார்ந்த தொலைநோக்கு, தேர்தல் களத்தில் பாஜக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான உடனடிப் புரிதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை சிலர், கட்சிக்குள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இருவரையும் திருப்திப்படுத்துகிற ஏற்பாடு என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தனியொரு தலைவரைச் சார்ந்து கட்டப்பட்ட கட்சிகளில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கெல்லாம் விளக்கமளிக்காமல் நழுவலாம். ஆனால் கூட்டுத் தலைமை என்பதற்கான இலக்கணமாகவும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் அப்படியெல்லாம் அப்போதைக்கு அப்போதைய நிலைமைக்கான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அகில இந்திய மாநாடும் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கொள்கை முடிவுகளும்.............. காங்கிரஸ் கட்சியின் வர்க்கச் சார்பு பற்றிய நிலைப்பாடு சார்ந்த தொலைநோக்கு, தேர்தல் களத்தில் பாஜக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான உடனடிப் புரிதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை சிலர், கட்சிக்குள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இருவரையும் திருப்திப்படுத்துகிற ஏற்பாடு என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தனியொரு தலைவரைச் சார்ந்து கட்டப்பட்ட கட்சிகளில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கெல்லாம் விளக்கமளிக்காமல் நழுவலாம். ஆனால் கூட்டுத் தலைமை என்பதற்கான இலக்கணமாகவும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் அப்படியெல்லாம் அப்போதைக்கு அப்போதைய நிலைமைக்கான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது




இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது அகில இந்திய 22ஆவது அகில இந்திய மாநாட்டை இம்மாதம் 18 தொடங்கி 22இல் நிறைவு செய்திருக்கிறது. பொதுவாக அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோழர்களும், இங்கு மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலுமே, தங்களது இத்தகைய தேசிய அளவிலான மாநாட்டை ‘கட்சி காங்கிரஸ்’ என்று குறிப்பிடுவதுண்டு. காங்கிரஸ் என்றால், பேராயம், மாமன்றம், விரிந்த மாநாடு, கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் அனைத்து மாநிலக் குழுக்களுக்குமான தேசிய அளவிலான விமர்சன / சுயவிமர்சன அரங்கம் என்றெல்லாம் பொருள் உண்டு. 

மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த 22ஆவது பேராயம், காங்கிரஸ் என்ற சொல் சார்ந்த பொருத்தத்தைத் தாண்டி, அரசியல் சார்ந்த பொருத்தப்பாட்டோடும் அமைந்தது. காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் ஒத்துழைப்பு குறித்த முடிவு என்னவாக இருக்கும் என்ற அனைத்துத் தரப்பினரது எதிர்பார்ப்புடன் இந்த மாநாடு கூடியது.

முன்வரைவில் சொல்லப்பட்டது

கட்சியின் முந்தைய மத்தியக் குழு இவ்வாண்டு ஜனவரியில் கொல்கத்தாவில் கூடி இறுதிப்படுத்திய மாநாட்டு அரசியல் தீர்மானத்திற்கான முன்வரைவில், காங்கிரசுடன் தேர்தல் உறவு இல்லை, ஆனால் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் ஒத்துழைப்பு இருக்கும் என்று முன்வைக்கப்பட்டிருந்தது. மத்தியக் குழுவில் சிறுபான்மையாக இருந்த உறுப்பினர்கள் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாற்று முன்வரைவு ஒன்றை முன்வைத்தார். நாட்டின் தற்போதைய சூழலில் காங்கிரசுடன் தேர்தல் உறவும் தேவை எனக் கூறும் அந்த மாற்று முன்வரைவு பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்படவில்லை. இதையொட்டி கட்சிக்குள் யெச்சூரிக்கும் பிரகாஷ் காரத்துக்கும் இடையே நீயா நானா போட்டி என்பதுபோல ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. நாட்டின் நிலவரத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத, பாஜக கையில் நாட்டின் ஆட்சியதிகாரத்தை மறுபடியும் ஒப்படைக்க வழிசெய்கிற முடிவு என்ற விமர்சனமும் சமூகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து வந்தது. சிலர் அத்தோடு நிற்காமல், சிபிஎம் தலைமைக்குப் பூணூல் மாட்டிவிடுகிற கைங்கரியத்திலும் இறங்கினர். wru₹ பாஜக வீழ்த்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியுடனும் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருப்பது உண்மைதான், ஆனால் தனது ஆட்சியில் கைவிடப்பட்ட மக்களின் ஏமாற்றங்களை பாஜக அறுவடை செய்துகொள்ள வாய்ப்பான சூழலை ஏற்படுத்திய காங்கிரஸ் தன்னையும் தனது கார்ப்பரேட் சேவைக் கொள்கைகளையும் இப்போதாவது மறு ஆய்வு செய்துகொள்ள வேண்டாமா என்று அதில் கேட்டிருந்தேன்.

முன்வரைவு சொல்வது என்ன?

பாஜக போன்ற வர்க்கக் குணாம்சங்களையே காங்கிரஸ் கட்சியும் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற கட்சியாக காங்கிரஸ் தன்னை காட்டிக்கொள்கிறது. ஆனால் மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்களை மேற்கொள்ளும் திறனற்றது என்பதை நிரூபித்துள்ளது. அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டை ஏற்படுத்தியது. பெரும் முதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்களின் நலன்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையும் கடைப்பிடிக்கிறது. எனவே, ஐக்கிய முன்னணியில் அவர்களை நேச சக்தியாகவோ அல்லது கூட்டாளியாகவோ நடத்துகிற நடைமுறை உத்தியை நாம் கைக்கொள்ள முடியாது.

இதுதான் அந்த முன்வரைவின் சாராம்சம். நாட்டை முற்றிலும் வகுப்புவாதமயமாக்கிவருகிற பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடர்வதைத் தடுக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாமே என்ற நியாயமான உணர்வோடு இந்த முன்வரைவைப் பலரும் சாடினார்கள். காங்கிரஸின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், மதச்சார்பின்மைக்காக வாதாடுவதில் திட்டவட்டமான அடையாளத்தை அக்கட்சி உருவாக்கத் தவறிவிட்டதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். தலைமை மாற்றத்தால் மட்டும் காங்கிரஸ் தனது தவறுகளிலிருந்து மீண்டுவிட முடியுமா என்றும் கேட்டிருந்தேன். மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்கள் காங்கிரஸ் தலைமையிடம் இதையெல்லாம் கேட்க மறுப்பது ஏன் என்றும் கேட்டிருந்தேன்.

உட்கட்சி ஜனநாயக உன்னதம்

காங்கிரஸ் தனது கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாகச் செய்திகள் எதுவும் வரவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்தவர்கள் தங்களது வினாக்களை காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பியதாகவும் தகவலில்லை. ஆனால் சிபிஎம் ‘கட்சி காங்கிரஸ்’ அந்த முன்வரைவை முழுமையாக விவாதித்திருக்கிறது. சரியாகச் சொல்வதானால், உட்கட்சி ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்குப் பாடம் நடத்திய மாநாடு, முந்தைய மத்தியக் குழுவின் சிறுபான்மையினர் வலியுறுத்தியதை ஒரு தனி முன்வரைவாக யெச்சூரி தாக்கல் செய்ய அனுமதித்தது. நாடு முழுவதும் நடந்த மாநில மாநாடுகளில் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்த 765 பிரதிநிதிகள், 74 பார்வையாளர்கள் முன்னிலையில், அந்த இரு முன்வரைவுகள் மீதும் மனம் திறந்த விவாதம் நடத்தப்பட்டது.

இரண்டு தீர்மான முன்வரைவுகளும் அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளின் தனிக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, பின்னர் அவர்களின் சார்பாக மாநாட்டில் எடுத்துரைக்கப் பொறுப்பளிக்கப்பட்ட 47 பிரதிநிதிகள் அந்த விவாதத்தில் கலந்துகொண்டார்கள். அரசியல் தீர்மான முன்வரைவின் மீது பிரதிநிதிகள் 373 திருத்தங்களைஅளித்திருந்தனர். மாநாட்டு வழிநடத்துக் குழு அவற்றில் 37 திருத்தங்களை ஏற்றுக்கொண்டது. முன்னதாக, இதன் மீது நாடு முழுவதுமிருந்து கட்சி உறுப்பினர்களிடமிருந்து வந்திருந்தவற்றில் 286 திருத்தங்களை மத்தியக் குழு ஏற்றுக்கொண்டது.

வழிநடத்துக் குழு தெரிவித்த திருத்தங்களை மத்தியக் குழு ஏற்றதையடுத்து, திருத்தப்பட்ட அரசியல் தீர்மானம் அனைத்துப் பிரதிநிதிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, முன்வரைவில் இருந்த ஒரு பத்தி (2.90) நீக்கப்பட்டது. “நமது நடைமுறை உத்தி என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளோடு ஒத்துழைப்பதாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத அச்சுறுத்தலுக்கு எதிராக விரிந்த அளவில் மக்களைத் திரட்டுவதற்காக மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளோடும் நாம் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ள பெருந்திரள் மக்களை ஈர்க்கும் வகையில் வர்க்க அமைப்புகளோடும் வெகுமக்கள் அமைப்புகளோடும் கூட்டு நடவடிக்கைகளை நாம் வலுவாக மேற்கொள்ள வேண்டும்” என்பதே அந்த நீக்கப்பட்ட பத்தி.

அத்துடன், ‘அரசியல் நிலைப்பாடு’ என்ற துணைத்தலைப்பின் கீழ், மற்றொரு பத்தியில் (2.115 (2)) இரண்டாவது வரி நீக்கப்பட்டது. “ஆயினும், இது காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித கூட்டு அல்லது புரிதல் என்பது இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்பதே அந்த நீக்கப்பட்ட வரி. அதற்கு பதிலாக ஒரு துணைக்கூறு (2.115 (3)) சேர்க்கப்பட்டது. “ஆனால் இது காங்கிரஸ் கட்சியுடன் ஒரு அரசியல் கூட்டு இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்பதே அது.

பின்வரும் துணைக்கூறும் (2.115 (4)) சேர்க்கப்பட்டது: “ஆயினும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே, ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒரு புரிதல் இருக்கலாம். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாதத்திற்கு எதிராக மக்களின் விரிந்ததொரு அணித்திரட்சிக்காக மதச்சார்பற்ற அனைத்து எதிர் சக்திகளோடும் நாம் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ள வெகுமக்களை ஈர்த்திடும் வகையில் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளை நாம் வலுவாக மேற்கொள்ள வேண்டும்.”

நம்பகமான நிலைப்பாடு

இந்தத் திருத்தங்களோடு மாநாடு ஒரு மனதாக நிறைவேற்றிய அரசியல் தீர்மானம்தான் இறுதியானது. அடுத்த மாநாடு வரையில் கட்சியின் அரசியல் / சமூகக் களச் செயல்பாடுகளுக்கு வழிகாட்டப்போவது. நீக்கப்பட்ட வரிகளோடு, சேர்க்கப்பட்ட வரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்ட ஒரு தெளிவான முடிவுக்குக் கட்சி வந்திருப்பது புரியும்.

எளிமையாக விளக்குவதெனில், காங்கிரஸ் கட்சியுடன் ஒரு அரசியல் கூட்டு இல்லை என்பதன் பொருள், தேசிய அளவிலோ மாநில அளவிலோ அக்கட்சி தனது தலைமையில் அமைக்கக்கூடிய தேர்தல் கூட்டணியில் ஒரு கூட்டாளியாக மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறாது. அதே போல், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அமைக்கப்படுகிற தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க முடியாது.

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரையில், அவ்வப்போது உருவாகிற அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப, ஆட்சியில் இருப்பது யார் என்ற அடிப்படையில் மட்டும் தேர்தல் கூட்டுகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கக் கண்ணோட்டத்தோடு செயல்படுவது இயல்பானது, தவிர்க்க முடியாதது. அவ்வகையில்தான் காங்கிரஸ் கட்சியுடன் ‘அரசியல் கூட்டு’ இல்லை என்ற முடிவை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது.

அதேவேளையில், “ஆயினும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே, ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒரு புரிதல் இருக்கலாம். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாதத்திற்கு எதிராக மக்களின் விரிந்ததொரு அணித்திரட்சிக்காக மதச்சார்பற்ற அனைத்து எதிர் சக்திகளோடும் நாம் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ள வெகுமக்களை ஈர்த்திடும் வகையில் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளை நாம் வலுவாக மேற்கொள்ள வேண்டும்” என்று சேர்க்கப்பட்டுள்ள துணைக்கூறு, அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ற வகையில், ஆர்எஸ்எஸ்/பாஜக காலூன்றியுள்ள மதவெறி சார்ந்த அரசியல் தளத்தை வலுவிழக்கச் செய்வதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளோடு ஒத்துழைப்பதற்கு வழிகாட்டுகிறது.

ஏற்கனவே இது மேற்கு வங்கத்தில் முயன்று பார்க்கப்பட்டதுதான். அப்போது கட்சியின் அகில இந்திய நிலைப்பாடு வேறொன்றாக இருக்க, அந்த மாநிலத்தில் விதிவிலக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் தேர்தல்களில் மேலும் திட்டவட்டமானதாக அறிவிக்கப்பட்டு, தேவைப்படும் மாநிலங்களிலெல்லாம், இந்த அணுகுமுறை கையாளப்படும். சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலிலும்கூட தேவைப்படும் மாநிலங்களில் இந்த அணுகுமுறை கையாளப்படக்கூடும். அதைக் கட்சியின் அந்தந்த மாநிலக் குழுக்கள் முடிவு செய்யும்.

தமிழகத்தில்கூட திமுக தலைமையிலான தேர்தல் அணியில் சிபிஎம் இடம்பெற்றிருந்தபோது அதில் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. அதன் காரணமாக, சிபிஎம் தனது சொந்த மேடையிலிருந்து ஆதரவு திரட்டிய நிலையும் இருந்தது. தேர்தல் அல்லாத மக்கள் பிரச்சினைகளில், மதச்சார்பின்மைப் பாதுகாப்பு முயற்சிகளில் காங்கிரஸ் கட்சியோடு ஒரே மேடையில் நிற்க சிபிஎம் தயங்கியதில்லை. அண்மையில்கூட, காஷ்மீர் சிறுமி ஆசிஃபா, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் சிறுமி ஆகியோருக்கு நீதி கேட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய இயக்கத்தில் காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தற்போதைய மாநாட்டுத் தீர்மானம் இதில் இன்னும் தெளிவாக முடிவெடுக்க வழி செய்யும். தேர்தல் கட்டம் வருகிறபோது இது திட்டவட்டமாக முன்னுக்கு வரும்.

காங்கிரஸ் கட்சியின் வர்க்கச் சார்பு பற்றிய நிலைப்பாடு சார்ந்த தொலைநோக்கு, தேர்தல் களத்தில் பாஜக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான உடனடிப் புரிதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை சிலர், கட்சிக்குள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இருவரையும் திருப்திப்படுத்துகிற ஏற்பாடு என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தனியொரு தலைவரைச் சார்ந்து கட்டப்பட்ட கட்சிகளில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கெல்லாம் விளக்கமளிக்காமல் நழுவலாம். ஆனால் கூட்டுத் தலைமை என்பதற்கான இலக்கணமாகவும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் அப்படியெல்லாம் அப்போதைக்கு அப்போதைய நிலைமைக்கான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது. அது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு முறையும் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், பாஜகவைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்ற ஏற்பாடுகளை விடவும், தேர்தலுக்கு முன்பே மக்களின் ஒப்புதலைப் பெறுகிற இந்த ஏற்பாடு நம்பகமானது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here