தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. மாநில உரிமைகள், கல்வி, விவசாயம், நகராட்சி நிர்வாகம் முதலான அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது , மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்துவது என்பவை உள்ளிட்ட விஷயங்களை விவாதித்தோம் என சந்திரசேகர ராவ் கூறியிருந்தாலும் இந்திய அளவில் ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சு நடந்ததை அவர் மறுக்கவில்லை. மதச்சார்பின்மை என்பதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என அவரும் திமுக செயல் தலைவரும் அழுத்தமாகக் கூறியிருப்பதை, தேர்தலுக்கு முன்போ பின்போ பாஜக ஆதரவு நிலை எடுக்க மாட்டோம் என்று சொல்வதாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
பாஜக , காங்கிரஸ் அல்லாத அணி என ஆரம்பத்தில் பேசிவந்த சந்திரசேகர ராவ் இப்போது இந்த அணியில் காங்கிரசையும் உள்ளடக்குவது பற்றிப் பரிசீலிப்போம் எனக் கூறியிருக்கிறார். இது அவரது நிலையில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றமாகும். இந்த மாற்றத்துக்கு திமுக செயல் தலைவரோடான விவாதம் காரணமாக இருக்கக்கூடும்.
‘தற்போது தோழமைக் கட்சிகள் சிலவற்ரோடு நாங்கள் சேர்ந்து செயல்பட்டுவருகிறோம். இன்று விவாதிக்கப்பட்ட விஷயங்களை அவர்களோடும் கலந்து பேசுவோம். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு, உயர்நிலைக் குழு ஆகியவற்றிலும் விவாதிப்போம்’ என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும்போது இருவரும் தீவிரமான அரசியல் திட்டம் ஒன்றையே விவாதித்திருக்கின்றனர் என யூகிக்கலாம். அது மட்டுமின்றி எந்த நிலை எடுத்தாலும் தோழமைக் கட்சிகளோடு இணைந்தே எடுப்போம் எனத் தெளிவுபடுத்துவதாகவும் அது அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விடுத்த அறைகூவல் பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரைச் சந்தித்துப் பேசினார். கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் மம்தா பானர்ஜி திமுக செயல் தலைவரோடு டெலிபோனில் பேசியதாகவும், மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்தப் பேச்சு இருந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
உதயமாகும் புதிய அரசியல் சூழல்
மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர ராவ் , மம்தா பானர்ஜி ஆகியோரின் இந்த முயற்சி உத்தரப் பிரதேச, பிகார் இடைத்தேர்தல்களில் பாஜகவும், காங்கிரசும் அடைந்த படுதோல்விகளுக்குப் பிறகு ஏற்பட்ட புதிய அரசியல் சூழலில் உருவெடுத்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது மட்டுமின்றி அந்தத் தொகுதிகளில் ஆறு சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு மூன்று சதவீதமாகக் குறைந்து அக்கட்சி டெபாசிட்டையும் இழந்தது. இது பாஜகவுக்கான மாற்று காங்கிரஸ் அல்ல என்பதான எண்ணத்தை மாநிலக் கட்சிகளிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் ஏற்பட்டுவரும் சரிவின் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் அதன் தலைவர்களுக்கே வந்துவிட்டது என்பதுதான் உண்மை.
2014 தேர்தலில் பாஜக அதிக எண்ணிக்கையில் இடங்களை வென்ற மாநிலங்களின் எண்ணிக்கை ஒன்பது. உத்தரப் பிரதேசத்தில் 71, உத்தராகண்டில் 15 , பிகாரில் 21 , ராஜஸ்தானில் 25, மத்தியப் பிரதேசத்தில் 25, மகராஷ்டிராவில் 23, குஜராத்தில் 26 , கர்நாடகாவில் 17, ஜார்கண்டில் 12 என இந்த ஒன்பது மாநிலங்களில் மட்டும் 235 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள தோழமை தொடருமானால் உத்தரப் பிரதேசத்தில் 2014 ல் 71 இடங்களை வென்ற பாஜக 2019 பொதுத் தேர்தலில் ஒற்றை இலக்கத்துக்குத் தள்ளப்பட்டாலும் வியப்பதற்கில்லை. ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அது சந்தித்துள்ள தோல்வி 2014இல் 25 இடங்களைக் கைப்பற்றிய அக்கட்சிக்கு 2019இல் அங்கே ஐந்து இடங்கள்கூட கிடைக்காது என்பதையே காட்டுகிறது. அதுபோலவே மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் அதன் வெற்றி வாய்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.
பிகாரில் நிதீஷ் குமாருடன் மீண்டும் கூட்டு சேர்ந்திருந்தாலும் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சிக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி அங்கும் பாஜக மண்ணை கவ்வப்போகிறது என்பதையே காட்டுகிறது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் 2014இல் 235 இடங்களை வென்ற ஒன்பது மாநிலங்களில் 2019இல் அது 135 இடங்களைக்கூட வெல்ல முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. செல்வாக்கு மிக்க மாநிலங்களில் ஏற்படும் சரிவை வேறு மாநிலங்களில் ஈடுகட்ட வாய்ப்பிருக்கிறதா எனப் பார்த்தால் அதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை. பிற மாநிலங்களில் வென்ற இடங்களை அப்படியே அது தக்கவைத்துக்கொண்டாலும் 2019 பொதுத் தேர்தலில் 175 இடங்களை அக்கட்சியால் தாண்டவே முடியாது என்பதுதான் நிதர்சனமாகத் தெரியும் உண்மை.
பாஜகவின் சர்வாதிகார அணுகுமுறை காரணமாகவும், பாஜக ஆட்சியில் எடுக்கப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாலும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தங்களது வாக்கு வங்கியும் சரிந்துவிடுமோ என பாஜகவின் முன்னாள் கூட்டாளிகள் அஞ்சுகின்றனர். அதனால்தான் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் முதலான கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன. 2019 தேர்தலில் புதிய கூட்டாளிகள் எவரும் அக்கட்சிக்குக் கிடைப்பார்கள் என்ற சாத்தியக்கூறும் தென்படவில்லை.
மாநிலக் கட்சிகளின் முன்னெடுப்பு
இந்தப் பின்னணியில்தான் மாநிலக் கட்சிகளை அணிசேர்க்கும் சந்திரசேகர ராவின் முயற்சியை அணுக வேண்டும். அதிகாரத்தில் இருப்பதற்காக காங்கிரஸ் – பாஜக என ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து கொள்வதுதான் இதுவரை மாநிலக் கட்சிகளின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. இதில் டிஆர்எஸ், திரிணாமுல் என எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. பாஜகவின் செல்வாக்கு வேகமாகச் சரிந்துவரும் நிலையில் அவை காங்கிரஸோடு கைகோர்க்கக்கூடும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், காங்கிரஸ் முன்புபோல மாநிலக் கட்சிகளுக்குத் தலைமை ஏற்கும் அளவுக்கு வலுவானதாக இப்போது இல்லை. ஒருவேளை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அது வெற்றிபெற்றால் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு மாறக்கூடும்.
சந்திரசேகர ராவ் – மம்தா பானர்ஜியின் மாற்று அணி முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதில் திமுக மட்டுமின்றி தெலுங்கு தேசமும், சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், பிஜு ஜனதா தளமும் இணைய வேண்டும். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும். அப்படி நடந்தால் அதிகபட்சமாக அக்கூட்டணி 150 முதல் 175 இடங்கள்வரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு அந்த எண்ணிக்கை போதாது என்பதால் அதை வைத்துக்கொண்டு மீண்டும் அவர்கள் காங்கிரஸோடோ பாஜகவோடோ கூட்டு சேர்ந்துதான் ஆட்சி அமைக்க வேண்டும்.
வாக்குகள் பிரியுமா?
காங்கிரஸ் அல்லாத அணி என்ற பெயரில் பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பது பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என்று பலரும் அஞ்சுகின்றனர். சந்திரசேகர ராவ் பாஜகவின் நெருக்கமான கூட்டாளிகளில் ஒருவராக இருந்தவர். அதிலும் குறிப்பாக அமித் ஷாவுக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவரை பாஜகதான் களமிறக்கிவிட்டிருக்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. திமுகவைப் போல மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை என்பவற்றின்மீது சந்திரசேகர ராவுக்கோ மம்தா பானர்ஜிக்கோ மிகப் பெரிய பிடிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள்மீது இப்படி சந்தேகம் கிளப்புவது மட்டுமே மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையைச் சாதித்துவிடாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரியாமல் தடுக்க வேண்டுமென்றால் பரந்துபட்ட மதச்சார்பற்ற அணியை உருவாக்க வேண்டிய கடமை முதன்மையாக காங்கிரஸ் கட்சிக்கே இருக்கிறது. ‘புலிக்கு பயந்தவர்களெல்லாம் என்மீது படுத்துக்கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் செயல்பட்டால் அத்தகைய அணியை காங்கிரஸால் உருவாக்க முடியாது. பாஜகவுக்கு எதிராகக் கூட்டணியை உருவாக்க வேண்டுமென்றால் பாஜக என்னென்ன தவறுகளைச் செய்கிறது என்பதை முதலில் காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை நாங்கள் செய்ய மாட்டோம் என அது வாக்குறுதி அளிக்க வேண்டும்.
காங்கிரசின் கடமைகள்
ஜிஎஸ்டி, நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம், விவசாயிகள் பிரச்சினைகளுக்கான தீர்வு, மாநிலங்களுக்கான கூடுதல் அதிகாரம், வரி வருவாய்ப் பகிர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வு முதலானவற்றில் தனது நிலைபாடு என்ன என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
நரேந்திர மோடி அரசு செய்வதைப் போல மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து அவற்றின் நிதித் தற்சார்பை ஒழிக்க மாட்டோம்; பொருளாதார தளத்தில் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளைக் கடைப்பிடிக்க மாட்டோம்; விவசாயிகளை வஞ்சிக்க மாட்டோம்; வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இளைஞர்களை ஏமாற்ற மாட்டோம்; தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் துரோகம் செய்ய மாட்டோம்; மதச் சிறுபான்மையினரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க மாட்டோம் எனப் பகிரங்கமாக காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் உங்களோடு கூட்டணி வைப்போம் என மாநிலக் கட்சிகள் நிபந்தனை விதிக்கலாம்.அதில் தவறில்லை. அப்படிச் செய்யாமல் காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முயற்சித்தால் அது பாஜகவின் ’பி’ டீம் என்ற நிந்தனைக்கே வழி வகுக்கும்.
இந்திய அளவில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் – திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நல்லிணக்கத்துக்கு வலுசேர்ப்பதாகவே இருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது. திமுக செயல் தலைவர் அதை நன்கு உணர்ந்தவர் என்பதனால்தான் காங்கிரஸ் குறித்த சந்திரசேகர ராவின் அணுகுமுறையிலேயே ஒரு மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது.
சந்திரசேகர ராவ் சொன்னதைப்போல இந்த அணி வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல் மாநில சுயாட்சிக்கான, சமூக நீதிக்கான, மதச்சார்பின்மைக்கான கூட்டணியாக மலர்ந்தால் அது மெய்யாகவே ஒரு ஜனநாயக மீட்பு அணியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக