கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 104 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றபோதும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் அக்கட்சி ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மஜத மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து மஜதவின் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 21) செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, “கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் தான் பெரிய கட்சியாக உள்ளோம். 40 தொகுதிகளில் இருந்து 104 தொகுதிகளுக்கு முன்னேறியுள்ளோம்.
காங்கிரஸுக்கு எதிராகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். பல்வேறு அமைச்சர்களுடன் முதல்வர் சித்தராமையாவும் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றையொன்று எதிர்த்து கடுமையாக தேர்தல் களத்தில் நின்றன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பொருந்தாத சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி புனிதமற்றது. நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், காங்கிரஸ் தற்போது தனது தொழுவத்தையே விற்றுவிட்டது. தங்கள் எம்.எல்.ஏ.க்களை 5 நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்து என்ன செய்தார்கள் என்பதை காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும்.
பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா 7 நாட்களை கேட்டதாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பொய் கூறியுள்ளனர்.
சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது. எனவே, ஜனநாயகத்தைப் பற்றியும் அரசியல் சாசனத்தை பற்றியும் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. எமர்ஜென்சியின் போது ஊடகங்களைத் தடை செய்தவர்களும் அவர்கள்தான். அவர்களிடம் இருந்து 14 மாநிலங்களை நாங்கள் வென்றுள்ளோம். ஆனால், எங்களின் இடைத்தேர்தல் தோல்விகளை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதும், ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. எனவேதான் ஆளுநர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். 2019ஆம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக