தமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதில், 3,500 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கின்றனர்.
அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்காக 25க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப்பள்ளிகள் மீதான மோகம், இதற்கு முக்கியக் காரணம். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் குறையவில்லை.
மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், வேறு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய ஆசிரியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.
ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. முதற்கட்டமாக இந்தப்பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், துவக்கப்பள்ளிகளில் மட்டும், 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
பணி நிரவல் செய்தாலும்கூட, உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். அதிகமாக உள்ள 5 ஆயிரம் ஆசிரியர்கள் நிலை குறித்து இனிமேல்தான் அரசு முடிவெடுக்கும்.
இதற்கிடையே ‘நகர்ப்புற அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாகவும், கிராமப்புறங்களில் 15 மாணவர்களுக்குக் குறைவாகவும் இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்குப் பெற்றோர் ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. சிறு குழந்தைகளைப் பஸ்களில் தனியாக அனுப்புவது, செலவழித்து வேன்களில் அனுப்புவது போன்ற நிலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஏழ்மையான பெற்றோர் தவிர்ப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றோருக்கு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினாலும்கூட, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவது இயலாது என்று அரசு கருதுகிறது.
ஆனால், இதைத் தர்மசங்கடமாகக் கருதாமல், எந்த ஒரு மாணவனும் தொலைதூரம் அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடைநிற்றல் என்பதைக் கட்டாயம் தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டும். இதற்காக ஏற்படும் இழப்புகளை அரசு தாங்கிக்கொண்டு, மாணவர்களின் நலனே முக்கியம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக