!
இன்று (மே 19)காலை போபையா நியமனத்தை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ்-மஜத சார்பாக முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரும் மத்திய அரசுத் தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அங்கு இருந்தார்.
காலை 10.45 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. கபில் சிபல் வாதத்தைத் தொடங்கினார்.
“கர்நாடக சட்டமன்றத்தில் நீண்ட கால மரபுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. மூத்த அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரே தற்காலிக சபாநாயராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது ஆளுநர் போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்திருக்கிறது. மூத்த உறுப்பினர்களே தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இருமுறை தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது’’ என்றார் கபில் சிபல்.
அப்போது நீதிபதிகள், “மனுதாரர்கள் போபையாவின் தகுதியைப் பற்றி புகார் கூறி அதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் பதிலளிக்க வேண்டும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப் போடத்தான் வேண்டும். அப்படி செய்யலாமா?’’ என்று கேட்டனர்.
உடனே கபில் சிபல், “போபையா தற்காலிக சபாநாயகராக இருந்து அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்துவதை தடுக்கவேண்டும்’’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி போப்டே குறுக்கிட்டு, “நாங்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் தற்காலிக சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். நீங்கள் சொல்வது எங்கள் ஆணைக்கே எதிராக உள்ளதே? அப்படியானால் யாரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது’’ என்று கேட்டார்.
மீண்டும் கபில் சிபல், “இப்போது தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா வித்தியாசமான வரலாறு கொண்டவர். அவர் ஏற்கனவே மேற்கொண்ட தகுதி நீக்க நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றமே விசாரித்துள்ளது. எனவே அவரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. வேறு யாரேனும் வைத்து நடத்துமாறு ஆளுநருக்கு நீங்கள் வழிகாட்டலாம்’’ என்றுவாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “ நீங்கள் முரண்பாடான வாதங்களை வைக்கிறீர்கள். குறிப்பிட்ட நபரையே தற்காலிக சபாநாயகராக நியமிக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொள்ள சட்டத்தில் வழியில்லை. மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமிப்பது என்பது மரபுதானே தவிர சட்டம் அல்ல. எனவே இந்த மரபு சட்டத்தின் கூறாக மாற்றப்படாத வரை நீதிமன்றம் இதில் தலையிட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள்,
“நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் நடத்தப்பட வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதே சிறந்த வழி. சட்டமன்றச் செயலாளர் பொறுப்பேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை வீடியோ பதிவும் செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.
நீதிபதிகளின் இந்த முடிவை மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வியும், கபில் சிபலும் வரவேற்றனர்.
அப்போது எடியூரப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இன்று கர்நாடகத்தில் இந்த பிரச்னைதான் பற்றி எரிகிறது. எனவே எல்லா தொலைக்காட்சிகளும் இதைத்தான் ஒளிரப்பும்’’ என்றார்.
இறுதியில் தங்கள் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தற்காலிக சபாநாயகரான போபையாவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார், நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாக நடத்துவதற்கு ஏதுவாக சட்டமன்றச் செயலாளர் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்ப வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் மாலை 4 மணிக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்று தீர்ப்பளித்தனர்.
வெளியே வந்த எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “காங்கிரஸ், மஜத வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். எனக்கு என்னவோ காங்கிரசார் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லையோ என்று தெரிகிறது” என்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு தற்காலிக சபாநாயகர் போபையா கர்நாடக சட்டமன்றத்தில் எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கர்நாடக சட்டமன்றத்தின் மீது கண் வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக