கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இல்லைச் சந்தித்துப் பேசினார். இருநாட்டு ராணுவ எல்லையான பன்முஞ்சோம் பகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வடகொரியாவின் சார்பில் இனி அணுகுண்டு சோதனை நடத்தப்படாது என்று மூனிடம் உறுதியளித்தார் கிம்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (மே 12) வடகொரிய அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள சுரங்கங்களை வெடி வைத்து தகர்க்கவுள்ளதாகத் தெரிவித்தது. அப்பகுதிகளில் செயல்பட்டு வந்த கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையங்களையும், பாதுகாப்பு சாவடிகளையும் மூடப்போவதாக அறிவித்தது. இரு வார காலத்துக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்த நிகழ்வுகளைக் காண அமெரிக்கா, தென்கொரியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் நாடுகளைச் சார்ந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் வருகை தர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது வடகொரிய அரசு.
வடகொரியாவின் அறிவிப்பை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ”இந்த மாதத்துக்குள் அணு ஆயுத சோதனை மையத்தை அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது வடகொரியா. ஜூன் 12ஆம் தேதியன்று இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தப்போகும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாதுர்யமான மற்றும் மிதமான இந்த முடிவுக்கு நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக