தமிழகத்தில் 2,900 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 476 மருத்துவக் கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிவருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக நாடு முழுவதும் 136 நகரங்களில் 2 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டு 31 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 82 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இதில், 9,000 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவர்.
சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 149 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 31 சதவிகித மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் தற்போது 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33 ,842 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். கோவையில் 32 மையங்கள் அமைக்கப்பட்டு 15,960 மாணவர்களும், , மதுரையில் 20 மையங்கள் அமைக்கப்பட்டு 11, 800 மாணவர்களும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
நாமக்கல்லில் 7 மையங்களில் 5,560 மாணவர்களும், சேலத்தில் 26 மையங்களில் 17,461 மாணவர்களும், திருச்சியில் 12 மையங்களில் 9420 மாணவர்களும். நெல்லையில் 10 மையங்களில் 4383 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். வேலூரில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு 9054 மாணவர்களும் தேர்வு எழுதவுள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.
இது தவிர சுமார் 6 ஆயிரம் தமிழக மாணவர்கள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மறுப்புத் தெரிவித்துவந்த நிலையில் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மாணவர்கள் தங்களைத் தயாராக்கிவருகின்றனர்.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான் என்று அலைக்கழிக்கப்படும் தமிழக மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று நம்புவோம்.
சிபிஎஸ்இ அறிவுரை!
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் 7 மணிக்கே திறக்கப்படும்.
ஹால் டிக்கெட்டை நகல் எடுத்து, அதை தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும்
ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
காலை 9.30 மணிக்குத் தேர்வுக்கான அறிவுரை வழங்கப்பட்டு, ஹால் டிக்கெட் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் நடைபெறும்.
இதையடுத்து காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிவடையும்.
மாணவர்கள் ஹால் டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அளித்த புகைப்படத்தை பின்பற்றி, அதேபோன்ற இரண்டு புகைப்படங்களை, தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
தேர்வு எழுத கறுப்பு அல்லது நீல நிற மை பேனா, தேர்வு மையத்திலேயே தேர்வர்களுக்கு வழங்கப்படும். எனவே மாணவர்கள் கொண்டு வரும் பேனாக்களுக்கு அனுமதி இல்லை.
தேர்வர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அமர வேண்டும் , வேறு இடத்தில் அமர்ந்தால் விடைத்தாள் ரத்து செய்யப்படும்.
தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் வழங்கப்படும்.. அதை வாங்கியவுடன் கவரின் மேல் உள்ள விபரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு விடைத்தாள் கவரை பிரிக்கக் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்துவார்கள். அதுவரை கவரை திறக்க கூடாது.
விடைத்தாளில் குறிப்பிட்ட இடத்தில் தங்களது தேர்வு எண் பெயர், தந்தை பெயர், தேர்வு மையத்தின் எண், உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
இரண்டு விடைகளைத் தேர்வு செய்திருந்தால், அதற்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது. ஒயிட்னர், அழிப்பான் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
விடைத்தாளில் தேர்வறை கண்காணிப்பாளர் கையெழுத்திட்டிருப்பதை தேர்வு முடிந்ததும் உறுதி செய்ய வேண்டும்.
நீட் தேர்வு முடிவு ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக