பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சமூகத்தினரிடையே இன்று (மே 5) ஏற்பட்ட மோதலில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களிடையே பல ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிரச்சினை ஏற்படும்போது, காவல் துறையினர் வந்து சமாதானம் செய்துவைத்துவிட்டுப் போவது வழக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த வன்னியம்மாள் என்ற 70 வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 24ஆம் தேதி அன்று இறந்துள்ளார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்குக் கொண்டுசெல்லும் வழியில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. இதனால் வன்னியம்மாளை அடக்கம் செய்ய மற்றொரு பாதை வழியாகச் சென்றுள்ளனர்.
இதைக் கண்ட மற்றொரு சமூகத்தினர் இந்த வழியாக உடலை எடுத்துச் செல்ல விட மாட்டோம் என்று மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசியும் கட்டைகளால் தாக்கியும் இரு சமூகத்தினரும் மோதலில் ஈடுபட்டதில் 12 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இரு சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோதலில் காயம் அடைந்த 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பினர். இன்று காலையில் அதே பிரச்சினைக்காக இரு சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு சமூகத்தினரும் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் கல்வீசித் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதால் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்தது வந்த காவல் துறையினர் கலவரத்தைக் கட்டுக்குள் அடக்கத் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இரு சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகளைத் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
தேனி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக