தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, வட்டாரங்களில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
இனி இந்த அலுவலர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவின்படி, வட்டாரங்களில் பணிபுரிந்து வந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இனி வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படுகின்றனர்.
உத்தரவு வெளிவந்த நாளில் இருந்தே இந்த அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பெயர் மாற்றம் பெறுகின்றனர்.
இவர்கள் அனைத்து வகை, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக். மற்றும் சுயநிதி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் கண்காணிக்க உள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளைக் கண்காணித்து அறிவுரை வழங்கும் பணிகளிலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஈடுபடுவர்.
அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கப் பெறுகிறதா என்பதையும் இந்த அலுவலர்கள் கண்காணிப்பர்.
இதுநாள் வரை மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கைகளின்போது, கூடுதல் கட்டணம் பெறுவது, ஒரு பள்ளியில் படித்துவிட்டு வருபவருக்கு, வேறு பள்ளியில் இடம் தர மறுப்பது ஆகிய பிரச்னைகள் குறித்து பெற்றோர், தங்கள் தரப்பு புகார்களை மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளருக்கு மட்டுமே அனுப்பும் நிலை இருந்தது.
தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை பிரச்னை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் பெற்றோர், தங்களது வட்டாரங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலரை அணுகி புகார்களைத் தெரிவிக்கலாம்.
மேலும் மெட்ரிக். பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ஒப்புதல் அளித்து, இணையதளம் மூலம் 25 சதவீத மாணவர் சேர்க்கை அளிக்கப்படும் விவகாரத்தையும் இந்த அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர்.
இது 2018-19 கல்வியாண்டிலேயே அமலுக்கு வருவதால் பெற்றோர்கள் தங்கள் தரப்பு புகார்களை, இனி அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களிடமே அளிக்கலாம். இது குறித்த நடவடிக்கைகளை வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்வர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக