கடையம் ராமநதி அணை தூர்வாரப்படுமா? விவசாயம் அழியும் அபாயம்_* கடையம்: கடையம் ராமநதி அணை தூர்வாரப்படும் என முதல்வர் அறிவித்தும் அதற்கான - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கடையம் ராமநதி அணை தூர்வாரப்படுமா? விவசாயம் அழியும் அபாயம்_* கடையம்: கடையம் ராமநதி அணை தூர்வாரப்படும் என முதல்வர் அறிவித்தும் அதற்கான

கடையம்: கடையம் ராமநதி அணை தூர்வாரப்படும் என முதல்வர் அறிவித்தும் அதற்கான பணிகளை துவங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விவசாயம் அழியும் அபாயம் காணப்படுவதுடன் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையை 1974ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி விவசாய பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். ராமநதி அணை 96 ஏக்கர் பரப்பளவில் 84 அடி கொள்ளளவுடன் 152 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது. 

இந்த அணை மூலம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம், மேலக்கடையம், தெற்குக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தப்பேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், மீனாட்சிபுரம், வீராசமுத்திரம், வாகைக்குளம் , பாப்பான்குளம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 4943.51 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும், கடந்த ஆண்டு ஓகி புயலின் போது கொட்டித் தீர்த்த மழையிலும் பாறாங்கற்கள், மரங்கள், மணல் அடித்து வரப்பட்டு ராமநதி அணையில் சேர்ந்தது. இதனால் அணையில் சுமார் 27 அடி வரை மணல், பாறாங்கற்கள், மரம் ஆகியவை நிரம்பி உள்ளது. தற்போது 27 அடிக்கு மேல்தான் நீர்தேக்கி வைக்கும் நிலை காணப்படுவதால், அணை முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. 

இந்த நிலையில் ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் அமைந்தால் ராமநதி அணைப் பாசன விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே அணையை முழுமையாக தூர்வாரிய பிறகே மேல்மட்டக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென ராமநதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
இதுகுறித்து கடையம் ஒன்றிய மதிமுக செயலர் மதியழகன் கூறியதாவது: கடையம் பகுதியின் வற்றாத நதியாக ராமநதி உள்ளது. இதை நம்பி மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அணையின் வடகால் மூலம் 8 குளங்களும், தென்கால் மூலம் 13 குளங்களும், பாப்பான்கால் மூலம் 12 குளங்களும் நீரைப் பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவு நீர் சேமிக்க முடியவில்லை. இதனால் மழை குறைந்த காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போதுள்ள நிலையில் ஜம்பு நதி மேல் மட்டக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமானால் ராம நதி பாசன விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். ராமநதியை முழுமையாக தூர்வாரி அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்கும் வசதியை ஏற்படுத்தினால்தான், ஜம்புநதி மேல்மட்டக் கால்வாயின் குறிக்கோளும் முழுமையாகும். 

அணையை தூர்வாருவதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிம் மனு வழங்கியுள்ளோம். ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நெல்லையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ராமநதி அணை தூர்வாரப்படும் என தமிழக முதல்வர் கூறினார். ஆனால் தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இதில் முழுக்கவனம் செலுத்தி அணையை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையம் வட்டார விவசாயிகளை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here