இந்தியாவில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலுமே இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கைத் தரம் தென்மாநில மாவட்டங்களில் வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை விடக் குறைவாக உள்ளது ஏன் என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
தேசிய குடும்ப சுகாதார சர்வே - 4 (2015-16) அறிக்கையின் தகவல்களைக் கொண்டு சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் ‘Understanding the geographical burden of stunting in India’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை மே 24ஆம் தேதியன்று வெளியிட்டது. இந்த ஆய்வில் உடல் பருமன் எடை விகிதம், கல்வி, திருமண வயது, கர்ப்பகால பாதுகாப்பு போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அதிக சுமை கொண்ட மாவட்டங்களுக்கும், குறைவான சுமை கொண்ட மாவட்டங்களுக்குமான வேறுபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துகளின் அளவைக் குறிக்கும் வகையில், இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயர வளர்ச்சி அளவிடப்படுகிறது. இதில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38.4 விழுக்காடு குழந்தைகள் குட்டையாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலகில் ஐந்து வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வின் படி, வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்ட மாவட்டங்கள் பெருமளவில் வட இந்திய மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் அமைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட வட மாநிலங்களில் 5.26 கோடி வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கின்றனர். அதாவது இந்தியாவில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் 80 விழுக்காடு குழந்தைகள் வட இந்திய மாநிலங்களில் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையில், ’இந்தியாவில் குழந்தைகள் குட்டையாக இருப்பதைக் குறைக்க பெண்களின் சுகாதாரத்திலும், கல்வியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்’ என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக