இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பை இழந்துள்ளன. சில பிராண்டுகள் காணாமலேயே போய்விட்டன.
2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய மாற்றமே நிகழ்ந்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் மேற்கொண்ட தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. க்ஷியோமி, ஆப்போ, விவோ, ஹூவே உள்ளிட்ட சீன நிறுவனங்களும், தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனங்களும்தான் தற்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையை ஆண்டுகொண்டிருக்கின்றன. இந்தியாவில் மேற்கூறிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2015ஆம் ஆண்டில் 63 சதவிகிதத்திலிருந்து 2017ஆம் ஆண்டில் 72 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கவுன்ட்டர் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வுப்படி, 15 ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இணைந்து சந்தையில் 90 சதவிகிதப் பங்குகளைத் தங்களது கைகளுக்குள் வைத்துள்ளன.
சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த சந்தை ஆய்வாளரான ஜெய்பால் சிங் இதுகுறித்து மணி கண்ட்ரோல் நிறுவனத்திடம் பேசுகையில், “பிரின்டட் சர்க்யூட் போர்டு அசெம்பளிங் செய்வதற்கு 10 சதவிகித வரி விதிக்கப்பட்ட பிறகு சிறு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களால் சந்தையில் நிலைத்திருக்க முடியவில்லை. அவற்றால் அதிக முதலீடுகள் செய்து உற்பத்தியை மேம்படுத்த முடியாமல் போனது. சந்தையில் நிலவும் அதிக போட்டி காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலையையும் அவற்றால் உயர்த்த முடியவில்லை. க்ஷியோமி நிறுவனம் ரூ.10,000 விலையில் தரமான, அதிக அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் இப்பிரிவில் இதர நிறுவனங்களால் சரியான போட்டியை வழங்க இயலவில்லை. விற்பனைக்கான வழிகளும் அதிக மூலதனமும் ஆப்போ, விவோ மற்றும் க்ஷியோமி போன்ற நிறுவனங்களை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உச்சத்தில் வைத்துள்ளன” என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக