திருச்சி புதூரில் உள்ள பார்வையற்றோருக்கான பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த வான்மதி, ப்ளஸ் டூ தேர்வில் 1200க்கு 1031மதிப்பெண்கள் பெற்று அந்தப் பள்ளியில் முதலிடம் பிடித்தது மட்டுமின்றி, பார்வையற்ற மாணவர்கள் வரிசையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
வான்மதியின் தந்தை மந்திர மூர்த்தி(59) ஒரு துப்புரவு தொழிலாளி. தாய் காசியம்மாள் (49) பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வான்மதியுடன் சேர்த்து ஆறு குழந்தைகள். அதில் வான்மதி தான் கடைசி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி மும்பையில் குடியேறினர். வான்மதியைப் போலவே அவரது இரு அக்காக்களும் கண் பார்வையற்றவர்களே. வறுமையின் காரணமாக பெற்றோர்களால் இவர்களுக்கு முறையான கல்வியை கொடுக்க முடியவில்லை. ஆனால் வான்மதி படிப்பில் நல்ல ஆர்வம் கொண்டவராக இருந்ததால் அவரை திருச்சியில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தனர். வான்மதி தான் அவர் குடும்பத்தில் பள்ளிக்குச் சென்ற முதல் மாணவி.
இவரது சாதனை குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ் செல்வி கூறுகையில்:
தமிழ் இணைய செய்திகள்
"வான்மதி நன்றாகப் படிக்கக்கூடியவர். அவர் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விடக் குறைவாகவே வந்துள்ளது. தற்போது வான்மதி, சென்னையில் உள்ள விடுதியில் தங்கி அங்கு கணினி, கீபோர்டு, இந்தி உள்ளிட்ட கோடை வகுப்புகளில் சேர்ந்து படிக்க உள்ளார். வான்மதியின் மதிப்பெண் குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது சேந்தமங்கலத்தில் தன் அக்கா வேளாங்கண்ணியின் வீட்டில் வசித்துவரும் வான்மதி, "என் பெற்றோர்கள் என்னைப் படிக்கவைக்க பட்ட கஷ்டமே என்னை சாதிக்கத் தூண்டியது. ஆங்கில ஆசிரியை ஆவதே எனது லட்சியம். நான் நல்ல நிலைமைக்கு வந்து என் பெற்றோர் மற்றும் அக்காக்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன்" என்று நெகிழ வைத்துள்ளார்.
தமிழ் இணைய செய்திகள் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக