கர்நாடகச் சட்டப் பேரவைக்கான தேர்தல் மே 12ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மே 15ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாள்களே உள்ள நிலையில், பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பாஜக, காங்கிரஸ், மஜக போன்ற கட்சிகள் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில், இதுவரை இல்லாத அளவு பணப்பட்டுவாடா சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள ஏடிஎம்களில் கடந்த இரண்டு மாதங்களாக ரூ.500, ரூ.20,00 நோட்டுகள் பெருமளவில் எடுக்கப்பட்டு இருப்பதைத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதன் காரணமாகவே அண்மையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏடிஎம்களில் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அதிக அளவில் நியமித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள், இலவச பொருள்கள், மதுபானங்கள் போன்றவை அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பாக நேற்று (மே 2) செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி ஓம்பிரகாஷ் ராவத், “கடந்த 2013ஆம் ஆண்டு 14 கோடி ரூபாய் அளவுக்குப் பணம், இலவசப் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது, தேர்தலுக்குச் சில நாள்களே உள்ள நிலையில், இதுவரை 128 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி, இலவசப் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலின்போது 13.42 கோடி ரூபாயும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 28.08 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுவரை 128 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக