புற்றுநோய் மருந்து தயாரிக்க, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்குத் தடை விதிக்கக் கோரியும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், வின்கெம் ஆய்வக நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று (மே 29) நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், புற்றுநோய் மருந்துக்கான மூலப்பொருட்களுக்குச் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா தவிர்க்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், இது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு ஜூன் 27ஆம் தேதி அன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்து வரும் 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் இந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து, இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக