தமிழக அரசு சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடப் போகிறது என்று கடந்த வாரம் வெளியான தகவலுக்கு இதுவரை கல்வித்துறை தரப்பில் உறுதியான மறுப்பு எதுவும் வரவில்லை. இந்த விவகாரத்தில் பல கட்சிகள் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில் காமராஜர் குடும்பத்தில் இருந்து தமிழக அரசுக்கு கண்டனமும், கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
இன்று (மே 30) சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை பற்றிய மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், காமராஜரின் தம்பி அண்ணாமலை நாடாரின் மகள் வழிப் பேத்தியும், கல்விக் கடவுள் காமராஜர் அறக்கட்டளையின் நிறுவனருமான டி.கே.எஸ்.மயூரி நேற்று சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
”தமிழக அரசு சுமார் 800 முதல் 900 அரசு ஆரம்பப் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எங்கள் பாட்டனாரும் முன்னாள் முதல்வருமான காமராஜர் அவர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். ஆனால் இப்போதைய தமிழக அரசு பள்ளிகளை மூட முடிவெடுத்திருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.
52 மாவட்டங்களில் ,மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் கட்டிடங்களை அரசு அலுவலகங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அரசின் வாடகை செலவு குறையும் என்றும் அரசு முடிவெடுத்த்துள்ளது. ஆக பள்ளிக் கூடங்களை வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டிடங்களாகவே பார்க்கிறது இந்த அரசு’’ என்றவர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் விஷயத்திலும் அரசின் அலட்சியத்தைக் குறிப்பிட்டார்.
“32 மாவட்டங்களில் இருக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 20 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ஆக அரசுப் பள்ளிகளில் மாணவர்களும் வேண்டாம், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஆசிரியர்களும் வேண்டாம் என்ற முடிவோடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்தின் கல்வித்துறைக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றி தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் உரிய நிதியை ஒதுக்கி போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மூடப்படுவதாக முடிவெடுத்துள்ள பள்ளிகளைத் திறக்க வேண்டும். இல்லையென்றால் கல்விக் கடவுள் காமராஜர் அறக்கட்டளை சார்பாக நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்றார் மயூரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக