ஆதாருக்கு ஆதரவளிக்கும் பில்கேட்ஸ்
ஆதார் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் தனி ஒருவருக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இதை மற்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறினார்.
ஜனவரி 2009ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆதார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஆதார் தொழில்நுட்பமானது உலகின் மிகப் பெரிய பயோமெட்ரிக் அடையாள முறையாக விளங்கி வருகிறது. இதில் 100 கோடிக்கும் மேலான மக்கள் பதிவு செய்துள்ளனர். இதனால் மக்களுக்கு அதிகளவில் பலன்கள் கிடைக்கும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
“மற்ற நாடுகளும் ஆதாரைப் பின்பற்றுவதன் மூலம் அந்நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். ஆதாரின் வடிவமைப்பாளரான இன்ஃபோஸிஸ் நிறுவனர்களுள் ஒருவரான நந்தன் நிகேனி மற்ற நாடுகளுக்கும் ஆதாரை எடுத்துச் செல்ல உலக வங்கியுடன் இணைந்து உதவி செய்து வருகிறார். மற்ற நாடுகளும், குறிப்பாக அண்டை நாடுகள் ஆதார் விவகாரத்தில் உதவி கேட்டு டெல்லியை அணுகுகின்றனர். ஆதார் தனிநபர் சுதந்திரத்துக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதது.
நந்தன் நிகேனி எனக்கு நல்ல நண்பரும் ஆர்வலரும் ஆவார். அவரது டிஜிட்டல் முன்னெடுப்புகள் கல்விக்கும், நாட்டை ஆள்வதற்கும் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நிதி ஆயோக் சார்பில் தொழில்நுட்ப உருமாற்றம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பில்கேட்ஸ், “ஆதார் என்பது எந்த ஓர் அரசாங்கமும் செயல்படுத்தாத ஒரு திட்டம். வல்லரசு நாடுகள்கூட இப்படி ஒன்றை அமல்படுத்தியதில்லை” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக