தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு தான் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசுபள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 300க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்க்கைக்காக ஒரே நேரத்தில் குவிந்தனர்.
இதேபோல் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோலியனூர், வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.என் தோப்பு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு குவிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டைவிட தற்போது மாணவர்கள் சேர்க்கை பிளஸ் 1 வகுப்பில் கூடுதலாக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம்.
மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர்.
மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை.
எனவே மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக