ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு என்ற திட்டத்தின் வாயிலாக 289 கோடி ரூபாய் செலவிலான மென்பொருளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஒன்பது லட்சம் மாநில அரசு அதிகாரிகளின் சேவைப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன.
மாநிலத்தின் நிதி மேலாண்மையையும், மனிதவள மேலாண்மையையும் ஒருங்கிணைப்பதற்கான இந்த முயற்சி அக்டோபர் 15 தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் விடுமுறை, இடமாற்றம் ஆகிய நிலை குறித்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அதேபோல, ஓய்வூதியம் பெறும் 7.39 லட்சம் நபர்களையும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். இந்த திட்டத்தில் பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் கையொப்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த தகவல்களையும் இந்த மென்பொருள் வழங்கும். அதன் வாயிலாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை அரசால் வலுப்படுத்தமுடியும்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 29,000 அதிகாரிகளால் ரசீதுகளை ஆன்லைன் வாயிலாக அரசுக் கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
கருவூலத்துடன் தொடர்பு கொண்ட அனைத்து அரசுத் துறைகளின் ஒத்துழைப்பை நம்பியே இத்திட்டம் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய ஆன்லைன் ஆட்சிமுறை திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலங்களின் கருவூலங்களை கணினி மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கருவூலங்கள் மற்றும் கணக்கு துறையால் துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அரசுத் தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக