பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:15 லிருந்து, 1:20 ஆக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மாற்றியமைத்ததன், காரணமாக தமிழகத்தில் 12,000 பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கல்வி தரத்தினால் சுமார், 40 சதவிகித பொறியியல் மாணவர்கள் வேலையில்லாமல் இருக்கின்ற வேளையில், ஆசிரியர் மாணவர் விகிதம் முரண்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 2 லட்சத்து 73000 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தால் போதுமானது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
பழைய மாணவர் ஆசிரியர் விகிதத்தின்படி, கல்லூரிகளில் 66,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறை பின்பற்றபடாமல், 55,000 பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர் என தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்கத்தின் நிறுவனர் கே.எம். கார்த்திக் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடந்த மே மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். இனி வேலை தேடுவது மிகவும் சிரமம். பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இல்லை. இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆந்திர பிரதேசத்தில், இங்கு வாங்கும் சம்பளத்தில் பாதி சம்பளத்துக்கு பேராசிரியர்களை நியமிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்காக, தரகர்கள் ஒவ்வொரு மாத சம்பளத்திலும் 20 சதவிகிதம் கமிஷன் கேட்கின்றனர். இதுபோன்று, கோவையில் உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்த எனது தோழியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலைக்காக,மார்க்கெட்டிங்கிற்கு சென்றபோது, கல்விதகுதி அதிகமாக இருக்கிறது என நிராகரித்துவிட்டனர் என கூறினார்.
மாநில உயர் கல்வி துறையின் மூத்த அதிகாரி ஒருவர், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில்,ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிர வேறுவழியில்லை என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக