ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான மத்திய அரசு அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வு நடத்தப்படுகிறது. இது முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது.
அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான 782 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி உட்பட 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டிருந்தன.
முதல்நிலைத் தேர்வில் பொது அறிவை சோதிக்கக்கூடிய முதல் தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. திறனறிவைக் கண்டறியும் 2-ம் தாள் தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது.
தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. அதன்பிறகு செப்டம்பரில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக