மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு மூலம் அதனைக் கண்டறிந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியை சிறப்பான முறையில் ஆற்றி வருகின்றனர். 2 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில், ஒரு ஆசிரியர் ஏதாவது காரணத்தினால் வராமல் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்யப்படும். ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படுகிறது.
*வருகை பதிவு விவரம்*
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், ரத்தவகை, தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும்.
இதன் மூலம், மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மாணவர்களின் வருகை பதிவு, காலையும், மாலையும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு வந்து விடும். இதன் மூலம் அங்கிருந்தே மாணவர்களைக் கண்காணிக்க முடியும்.
ஆசிரியர்கள் - மாணவர்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தப்படும். இதன் மூலம் தற்போது உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
*விபத்து காப்பீடு*
மாணவர்களுக்கு வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம், விபத்து நடைபெற்ற 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். இந்த திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக