தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த 36 படிப்புகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி, பதிவாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கூறியது:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த இளநிலை மற்றும் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
20 இளநிலை படிப்புகள் (பி.எஸ்சி), 13 பட்டயப் படிப்புகள், 3 பல் மருத்துவப் பட்டயப் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. ரேடியோதெரபி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, உடற்கல்வி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் என மொத்தம் 36 மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன.
இவற்றில் பி.எஸ்சி படிப்புகள் நான்கு ஆண்டுகளும், பட்டயப்படிப்புகள்(டிப்ளமோ) இரண்டரை ஆண்டுகளும் நடைபெறும்.
தமிழகத்தில் 500 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
அவற்றின் பங்களிப்புடன் இந்தப் படிப்புகள் நடைபெறுகின்றன. கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையாகும்.
இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் கடந்த ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேலான இடங்கள் காலியாக இருந்தன.
இந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகம் இருப்பதால் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர முன்வர வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்குப் பிறகு இந்தப் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக