அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளில், 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 16 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர் என்று அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகம் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடைய குழந்தைகளையும் பிரித்தனர். இதனால் ஜூன் மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி 2053 குழந்தைகள் அனாதைகளாக மாற்றப்பட்டனர்.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் எழுந்தன. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்குக் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ட்ரம்ப், கடந்த 21ஆம் தேதி அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறும் அகதிகளின் குழந்தைகளைப் பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்குத் தடை விதித்துக் கையெழுத்திட்டார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் தற்போது விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள குடியுரிமைத் துறை அலுவலகத்தில், பிரிக்கப்பட்ட குழந்தைகள் தொலைபேசி மூலம் பெற்றோருடன் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக