செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடி செலவில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூன் 25)அறிவித்துள்ளார்.
பத்து நாட்கள் விடுமுறைக்கு பின், இன்றைக்கு கூடிய சட்டசபை கூட்டத்தில் விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகின்ற தொற்று அல்லாத நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால், இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 60 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் நிறுவப்படும். இங்கு, பட்டப் படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இயற்கையான முறையில் பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.
தமிழகத்தில் 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக மேம்படுத்தப்படும்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு அடுக்குமாடிக் கட்டடத்தில் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேலும் மூன்று தளங்கள் கட்டப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேலும் நான்கு தளங்கள் கட்டப்படும். சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளில் 30 கோடி ரூபாய் செலவில் தரைத் தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்படும்.
மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, “பிரேக்கி” தெரப்பியுடன்கூடிய “சி.டி.ஸ்டிமுலேட்டர்” மற்றும் “பங்க்கர்” கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க, “தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டத்தின் கீழ், 20 மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
காச நோயாளிகளுக்கு நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்” ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
நடப்பாண்டில், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
மேலும், எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக