இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள் மே மாதத்தில் 63 சதவிகிதம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் மே மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களது கிளை நிறுவனங்களிலோ அல்லது தங்களது கூட்டு நிறுவனங்களிலோ மொத்தம் 3.12 பில்லியன் டாலரை முதலீடு செய்திருந்ததாகவும், இந்த ஆண்டின் மே மாதத்தில் முதலீடுகள் 63 சதவிகிதம் குறைந்து 1.17 பில்லியன் டாலராக மட்டுமே இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. முந்தைய ஏப்ரல் மாதத்தில்கூட 3.56 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் மே மாதத்தில் வெளிநாடுகளில் மேற்கொண்ட மொத்த முதலீடுகளில், பங்கு முதலீடாக 374.18 பில்லியன் டாலரையும், கடன் வாயிலாக 162.96 மில்லியன் டாலரையும், உத்தரவாதப் பத்திரங்கள் வாயிலாக 630.45 மில்லியன் டாலரையும் முதலீடு செய்திருக்கின்றன. இந்திய நிறுவனங்களிலேயே அதிகபட்சமாக இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் 368.09 மில்லியன் டாலரும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 57.94 மில்லியன் டாலரும், டாடா ஹிடாச்சி கன்ஸ்ட்ரக்ஸன் மெசினரி நிறுவனம் 26.62 மில்லியன் டாலரும், வதவன் குளோபல் கேப்பிடல் நிறுவனம் 15.23 மில்லியன் டாலரும் முதலீடு செய்திருக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல், மே) மொத்தம் 4.73 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக