அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் வில்வித்தை உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெண்களுக்கான தனிப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான தீபிகா குமாரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் தீபிகா, தரவரிசையில் முன்னணியில் இருக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை சந்தித்தார்.
முதல் செட்டை தீபிகா 30- 29 என கைப்பற்றினார். 2ஆவது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3ஆவது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலையில் இருந்தது. 4ஆவது மற்றும் 5-வது செட்டில் தொடர்ந்து சிறப்பாக அம்பு எய்த தீபிகா, முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்று 7-3 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
போட்டி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, "முந்தைய வெற்றி தோல்விகளை மறந்துவிட்டு, என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே எனக்குள் நான் அடிக்கடி கூறிக்கொண்டேன். அந்தச் சமயத்தில் ஆட்டத்தை ரசித்து ஆடினேன். வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆறு உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள தீபிகா, 2011, 2012, 2013 மற்றும் 2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார். ஆனால் அந்த நான்கு முறையும் வெள்ளிப்பதக்கத்தையே வென்றிருந்தார். தற்போது அவர் முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக