
அலுவலக வாழ்க்கையில் பணிச் சுமை, அளவுக்கு மீறிய கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய கட்டாயம் போன்ற பல இக்கட்டான சூழல்களை அன்றாடம் பலர் சந்திப்பதுண்டு. அதே சமயத்தில் இந்தச் சூழல்களை சந்திப்பதற்கான காரணம் என்ன என்பதைச் சற்று நிதானமாக ஆராய்வது அவசியம். அவ்வாறு அலசிய ஓர் ஆய்வுக் குழுவின் முடிவுகளைப் பார்க்கையில், மேற்கூறிய சிக்கல்கள், அவற்றால் ஏற்படும் மன உளைச்சல் இவை அனைத்திற்கும் நேரத்தை அதிகமாக விரயம் செய்வதே முதல் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
1982 முதல் 2004 வரை நடத்தப்பட்ட பல ஆய்வுகளைச் சேர்த்துப் பார்த்த அந்தக் குழு, நேரத்தைத் திறம்படச் செலவு செய்வதனால், உங்களது வேலை மற்றும் நேரத்தின் மீது கட்டுப்பாடு வைத்துக்கொள்ளலாம் என்கிறது. அலுவலகத்தில் நல்ல விளைவுகளையும் மாற்றங்களையும் காணலாம் என்பதோடு, மன உளைச்சலையும் முற்றிலுமாகத் தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த விளைவுகளைப் பற்றிய விழிப்புடன் நாம் செயல்பட்டாலும், மறு தினம் அலுவலகம் சென்றவுடன் எப்படியென்றே தெரியாமல் நேரத்தைச் செலவிட்டு, வேலையைக் குறித்த நேரத்துக்குள் முடிக்க இயலாது இருப்பவர்கள் அதிகம் என்றே சொல்லலாம். உங்களது அலுவலக நேரத்தின் எட்டு மணி நேரத்தை எப்படிக் கச்சிதமாக வேலைக்காக மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

குறிப்பு வைத்துக்கொள்ளுங்கள்
இது சற்று அடிப்படையான விஷயம் என்றாலும், சரியாகப் பின்பற்றினால், பல மாற்றங்களைக் கொண்டுவரக் கூடியது. உங்களது ஒவ்வொரு நாளையும் எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை அவ்வப்போது குறித்துக்கொள்ளுங்கள். எந்த வேலையை எப்போது செய்கிறீர்கள், இடைவேளை எடுக்கும் கால அளவு என்ன, பணியில் மனம் செலுத்தாது எவ்வளவு நேரம் விரயம் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு மூன்று முறையாவது இதைச் செய்வதால், அலுவலகத்தில் இருக்கும் எட்டு மணி நேரத்தைப் பற்றி உங்களுக்கு முழுவதுமாகப் புலப்படுகிறது. தவிர, விரயம் செய்யும் அளவுகோலை உங்களின் எழுத்து வடிவத்தில் பார்க்கும்போது, சரியாகச் செலவிட வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்குள் பிறப்பெடுக்க இந்த வழி காரணமாக அமைந்துவிடும்.
80/20 மதிப்பீடு
80 சதவிகித விளைவுகள் 20 சதவிகித உழைப்பின் மூலம் கிடைக்கின்றன என்று பரேடோ என்ற கொள்கையின் விதிமுறை கூறுகிறது. நேரத்தைப் பற்றிக் குறிப்பெடுத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட பின், எந்த வகையான வேலைகளுக்கு எவ்வளவு விளைவுகள் வருகின்றன என்பதை உங்களால் மதிப்பீடு செய்ய இயலும். இதன் மூலம், விளைவுகள் அவ்வளவாக இல்லாத காரியத்திற்கு உங்களது நேரத்தை அதிகமாகச் செலவிடத் தேவை இருக்காது. அதே சமயம், சரியான வகையில் நேரத்தை உபயோகித்து ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான அதிகபட்ச விளைவுகளையும் உங்களால் காண முடியும்.
திட்டமிடல் நல்லது
அறிஞர்கள் மற்றும் மனிதவள நிபுணர்களின் கருத்து என்னவென்றால், உங்களுடைய ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டுக்கொண்டு அதற்கேற்ப வேலைகளைச் செய்தால், நேரம் உங்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கும்.

பொதுவாகவே, பலரும் நேரத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், நேரத்தைச் சரியாகச் செலவிட இயலாத சூழல் அவர்களுக்கு ஏற்படுகிறது. ''டைம் எப்படி போகுதுன்னே தெரியவில்லை'' என்று பலர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். இதற்குக் காரணம், நேரத்தின் மீது நாம் கட்டுப்பாடு இல்லாமல், அதன் வேகம் தெரியாமல் செயல்படுவதே.
அன்றாட வேலைகள் மற்றும் அதற்கான நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி அதன்படி செய்வதால், நீங்கள் நினைத்ததைவிட, நேரம் மிச்சம் இருப்பதை உணர்வீர்கள் என்பது அறிஞர்களின் கருத்து.
வேலைகளைக் குறிக்கோளாக மாற்றுங்கள்
இந்தக் குறிப்பிட்ட முறையானது, நேரத்தைச் சரியாகச் செலவிட உதவுவது மட்டுமல்லாமல், அலுவலகத்தின் சில முக்கிய வேலைகளிலும் உங்களது கவனத்தைச் செலுத்த உதவியாக இருக்கும். உங்களுடைய அன்றாடப் பணிகளை நீண்டகாலக் குறிக்கோள்களுடன் இணைத்துக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு, சில வேலைகளைச் செய்து முடித்தால், பணி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் என்று கணித்து அதற்கேற்பத் திட்டமிட்டு வேலைகளைச் செய்து முடியுங்கள். தினமும் வேலை, அலுவலகம் என்ற அலுப்பு இல்லாமலும், புது உத்வேகத்தையும் இது தரும். இந்தக் குறிக்கோளுக்கு ஏற்ப உங்களுக்குத் தினம் சேரும் புது வேலைகளைக் குழுவாக எடுத்து அதைச் செய்து முடியுங்கள். நேரத்தைக் குறிக்கோளுக்கு இணங்க வகுத்துக்கொண்டு உபயோகிப்பதால் வேலையும் எளிதாக முடியும் குறிக்கோளைக் கச்சிதமாக அடையவும் முடியும்.
முக்கியத்துவம் அளித்தல்
நீங்கள் திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று துவங்கிய பின், மற்றொருவரோ அல்லது உங்களது உயரதிகாரியோ புதிதாக ஒரு வேலையை உங்களிடம் சேர்ப்பர். அந்த வேலையின் தன்மை என்ன, உடனடியாக முடிக்க வேண்டியதா அல்லது கூடுதல் கெடு உள்ளதா என்பதை முதலில் கவனிப்பது அவசியம்.
புதிதாகத் தரப்படும் வேலையுடன் எந்தக் குறிப்பும் இல்லாமல் இருந்தால், எப்போது முடிக்க வேண்டும் என்பதை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களது வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கெடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வேலையை நீங்கள் சற்றுத் தாமதமாகக்கூடத் துவங்கி முடித்துவிடலாம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம், அந்த வேலைக்கான முக்கியத்துவம் ஆகியவற்றை ஒப்பிட்டு மதிப்பிட்டுக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக