மதுரை மாவட்டத்தில் 65% பள்ளிகளில் விதி மீறல்! அங்கீகாரம் பெறாத 43 பள்ளிகளுக்கு அபராதம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதுரை மாவட்டத்தில் 65% பள்ளிகளில் விதி மீறல்! அங்கீகாரம் பெறாத 43 பள்ளிகளுக்கு அபராதம்*

மதுரை மாவட்டத்தில் 65 சதவிகித பள்ளிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவது சிறப்புக்குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகாரமே பெறாமல் செயல்பட்டு வந்த  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என 43 பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

   மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2134 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 1234,  அரசு உதவி பெறும் பள்ளிகள் 314,  தனியார் சுயநிதிப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன்) 54,  மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 36  உள்ளன.

      அரசு பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.  உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அனுமதி என்ற நிலை இருந்தது. தற்போது  ஆண்டுதோறும் அனுமதி புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
    பள்ளிகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கு  தீயணைப்பு சாதன சான்று, சுகாதாரச் சான்று, கட்டட உறுதிச்சான்று, கட்டட வரைமுறைச் சான்று ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

தொடக்கப் பள்ளிகளுக்கு ஆரம்பத்தில் வாடகை கட்டடம் என்றாலும், பின்னர் அவை சொந்தக் கட்டடத்திலேயே இயங்கவேண்டும் என்பதும் முக்கியம். கட்டணம் வசூலிக்கவும் விதிகள் உள்ளன. ஆனால், சுயநிதிப் பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளும் மறைமுகமாக கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது.

  ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் 2 ஏக்கரிலும், நகர்ப்புறங்களில் ஒரு ஏக்கரிலும் இருப்பது அவசியம். தொடக்கப் பள்ளிகளுக்கு தரைத்தளம் மற்றும் ஒரு மாடி மட்டுமே இருத்தல் வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் 30  குழந்தைகள் அமரும் வகுப்பறைகள் 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் இருத்தல் வேண்டும். அதில் 2 கதவுகள், 3 ஜன்னல்களும் இருத்தல் அவசியம்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தரைத்தளத்துடன் இரு மாடிகள் மட்டுமே கட்டப்படவேண்டும் என்பதும் விதியாகும்.  பள்ளிகளில் ஒரே நேரத்தில் 10 குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி தேவை. சுற்றுச்சுவர் அவசியம் என விதிமுறைகள் நீள்கிறது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து உத்தரவின் பேரில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆய்வு நடத்தினர்.  ஆய்வின் முடிவில் மெட்ரிக்குலேசன், உதவி பெறும் பள்ளிகள்  என 65 சதவிகிதப் பள்ளிகள் ஏதாவது ஒரு வகையில் விதிகளை மீறிச் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது

.   
   மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலாக தரைத்தளத்துடன் மூன்று மாடிகள் என விதி மீறி கட்டப்பட்டிருப்பதும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.  மத்திய அரசு கல்வித்திட்டத்தில் செயல்படும் 27 பள்ளிகளில்  14 பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை.

      உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதப்படி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதும், விதிமீறி கட்டணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து கூறியது:

இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி மதுரை மாவட்டத்தில்  மழலையர் தொடக்கப்பள்ளிகள் 32, மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐசிஇ ஆகிய வகையில் 11 பள்ளிகள் என 43 பள்ளிகள் எந்தவித அங்கீகாரமும் பெறாதது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here