நெட்வொர்க் 18 குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது தொடர்பாக புதிய ஆய்வை மேற்கொள்ளுமாறு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபிக்கு பத்திரங்கள் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆணையம் ஜூன் 22ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், '2016ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி செபி வெளியிட்டுள்ள உத்தரவில் முறையான வழிமுறைகள் வழங்கப்படவில்லை. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பட்டியலில் முறையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை' என்று கூறியுள்ளது. நெட்வொர்க் 18 நிறுவனத்தை மறைமுகமாக, ரிலையன்ஸ் நிறுவனமே கட்டுப்படுத்துவதாக எழுந்த முறையீட்டை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நெட்வொர்க் 18 குழுமத்தின் கீழ், சி.என்.என்.-ஐ.பி.என்., சி.என்.பி.சி., டி.வி.18., கலர்ஸ் மற்றும் மணி கண்ட்ரோல்.காம்., ஃபர்ஸ்ட்போஸ்ட்.காம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களும் உள்ளன. நெட்வொர்க் 18 குழுமத்தை முழுவதுமாக கைப்பற்றுவதற்கான முயற்சியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் துணை நிறுவனமான இன்டிபெண்டன்ட் மீடியா டிரஸ்ட் வழியாக நெட்வொர்க் 18 குழுமத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக