வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாதவரை பள்ளிகள் திறப்பினைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நேற்று (மே 31) தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி வெப்பநிலை, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி, மதுரை விமான நிலையம், நாகையில் தலா 101 டிகிரி, வேலூர், திருச்சி, கடலூர், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 100 டிகிரி என வெப்பம் நிலவியது.

இந்த வெப்பம் தமிழகத்தின் சில பகுதிகளில் 105 முதல் 109 டிகிரி வரை இன்னும் மூன்று நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில்தான் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 1) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகள் 41 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாத நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலை சமாளிப்பதற்கான மின்விசிறி வசதி கூட பல பள்ளிகளில் இல்லாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.

குறிப்பாக தென்மேற்குப் பருவமழையின் எல்லைக்கு அப்பால் உள்ள வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக உள்ளது. கத்திரி வெயில் முடியும் வரை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தாண்டாத சென்னையில் கத்திரி வெயில் முடிவடைந்த பிறகு 100 டிகிரிக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி இன்னொரு கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் வரும் 11ஆம் தேதி முதல் தான் திறக்கப்படவுள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகளும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இம்மாத இறுதியில் தான் திறக்கப் படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அரசு பள்ளிகள் மட்டும் அவசர, அவசரமாக திறக்கப்படவேண்டிய அவசியம் என்பதுதான் அன்புமணியின் கேள்வி.

2017ஆம் வருடமும் இதேபோல வெப்பம் கடுமையாக இருந்ததால் பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்ட நிலையில், “பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 2 அல்லது 3ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூன் 7ஆம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். ஆகவே, முதல்வர் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும்’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அன்று அறிவித்தது இங்கே நினைவுகூரத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here