அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான பணியிட கலந்தாய்வில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கலந்தாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.
மருத்துவக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் மாலையில் கலந்தாய்வு தொடர்ந்தது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்பை முடித்தவர்கள் குறிப்பிட்ட காலம் (bond) அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும்.
அந்த வகையில் பணியிடங்களைப் பெறுவதற்கான கலந்தாய்வு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி அதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலந்தாய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ பேச்சுவார்த்தை நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாலையில் மீண்டும் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. இன்னும் இரண்டு நாள்கள் இக்கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கலந்தாய்வில் பங்கேற்றோர் சிலர் கூறும்போது, அரசு மருத்துவர்களைக் காட்டிலும், அரசு மருத்துவர்கள் அல்லாதோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் எந்த மருத்துவமனையில் காலியிடங்கள் உள்ளன என்பது குறித்த முழு விவரம் கலந்தாய்வு பட்டியலில் காண்பிக்கப்படவில்லை.
கலந்தாய்வுக்கு முன்பாகவே பல இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் அரசு மருத்துவர்களுக்கான உரிமை பாதிக்கப்படுகிறது' என்றனர் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக