போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 55 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த பி.இ. இடங்களில் 5,940 இடங்களை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக விண்ணப்பித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற வேண்டும் என்பதோடு, அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அந்தஸ்தையும் பெற வேண்டும்.
இந்த அனுமதி வழங்குவதற்கு முன்பாக, ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தப்படும்.
அப்போது கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர் விகிதாசாரம், ஆசிரியர்களின் கல்வித் தகுதி, ஆய்வக வசதிகள், நூலக வசதி என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*கால அவகாசம் அளித்தும்கூட*
இந்த உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள கல்லூரிகளுக்கு, குறைகளை நிவர்த்தி செய்ய 15 நாள்கள் கால அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கப்படும்.
இந்த கால அவகாசத்துக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத கல்லூரிகளில், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை இடங்களை பல்கலைக்கழகம் குறைத்துவிடும்.
இதேபோன்று, 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான ஆய்வை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் -மே மாதங்களில் மேற்கொண்டது.
இதில் எச்சரிக்கைக்குப் பிறகும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாத 55 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 5,940 பி.இ. இடங்களை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறும்போது , 'தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 250 பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கல்லூரிகளுக்கு 15 நாள் கால அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான கல்லூரிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விட்டன.
ஆனால், 55 பொறியியல் கல்லூரிகள் கால அவகாசம் முடிந்த பின்னரும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை.
அதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளில் கணினி அறிவியல், இசிஇ, இயந்திரவியல், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இடம்பெற்றிருந்த இடங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது 5,940 இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக