மக்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கும் விதமாக மருத்துவக் கருவிகளின் விலையைக் குறைக்கும் முயற்சியில் சுகாதாரத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. அதன்படி சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவச் செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சகத்தின் ஓர் அங்கமான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பாக வரைவறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து வகையான பொருத்தக்கூடிய மருத்துவக் கருவிகள், சிடி ஸ்கேன் கருவிகள், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகள், டெஃபிபிலேடார் கருவிகள், டயாலசிஸ் எந்திரங்கள், பிஇடி கருவிகள், எக்ஸ்ரே எந்திரங்கள், எலும்பு மஜ்ஜை உயிரணு பிரிப்பான் உள்ளிட்ட கருவிகளை மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் ‘மருந்து’ பொருட்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது பங்குதாரர்களின் கருத்துக் கேட்புக்குப் பிறகு 21 நாட்களுக்குள் இறுதி செய்யப்படும்.
தற்போதைய நிலையில் கார்டியாக் ஸ்டெண்ட், எலும்பியல் உள்வைப்புக் கருவிகள், இதய வால்வுகள், உள்நோக்கிய கணு லென்சுகள், மயக்க மருந்துகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட 23 மருத்துவப் பொருட்கள் ‘மருந்து’ பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கார்டியாக் ஸ்டெண்ட் உள்ளிட்ட கருவிகளின் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடு எதுவும் இல்லை. மேற்கூறிய 23 கருவிகளின் பட்டியலில் முன்னர் கூறிய 8 பொருட்களையும் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் சிடி ஸ்கேன் எந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு ரூ.6 கோடி வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை குறையும்போது மக்களுக்கான ஸ்கேன் செலவுகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக