2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சிறந்த வங்கியாளரும் பொருளாதார நிபுணரும்கூட. பிசினஸ் லைன் ஊடகத்துக்கு இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில், இந்தியாவில் வறுமை ஒழிப்பு சாத்தியமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “வறுமை என்பது ஏழைகளால் உருவாக்கப்பட்டதல்ல. அது பொருளாதார அமைப்பால் உருவாவது. வறுமையை ஒழிப்பதற்கு ஏழைகளின் கைகளில் போதிய பணத்தைக் கொடுத்தால் மட்டும் சாத்தியமாகாது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் தேவையான பணம் அவர்களுக்கு வந்துகொண்டிருக்க வழிவகை செய்ய வேண்டும். எனவேதான் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கடனுதவி வழங்க நிதி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.
அவர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தைத் தாங்களே சம்பாதிக்க வேண்டும் என்பதோடு, சுயமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏழைகளின் மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்க 10 சிறு நிதி நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. பணக்காரர்களுக்கு மட்டுமே கடன்களை வழங்கி வரும் வங்கிகளைப் போல அல்லாமல் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்கும் சிறு நிதி நிறுவனங்களை இந்தியா அதிகளவில் உருவாக்கிட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் பணம் என்பது போதுமான அளவு கிடைத்திட வேண்டும். பணமே மக்களின் பொருளாதார ஆக்சிஜனாகும். அவர்கள் வாழ்வதற்கு இந்த ஆக்சிஜனும் தேவைப்படுகிறது” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக