சிங்கப்பூரில் நடைபெறவுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தால், விரைவில் அவர் அமெரிக்கா வர வேண்டுமென அழைப்பு விடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
ஜூன் 12ஆம் தேதியன்று சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னைச் சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அங்கு, செண்டோசா தீவிலுள்ள கெபல்லா ஹோட்டலில் இருவரது சந்திப்பு நடைபெறவுள்ளது. கிம் மற்றும் ட்ரம்ப் இருவரும் நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லையிலுள்ள பன்முஞ்சோம் என்ற இடத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இல்லைச் சந்தித்தார் கிம் ஜோங் வுன். அதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் வடகொரியாவில் இருந்து சீனாவுக்கு பிரத்யேக ரயிலில் சென்ற கிம், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த இரு சந்திப்புகளுக்கும் பிறகு, வடகொரியா அணு ஆயுதச் சோதனையைக் கைவிடுவதாக அறிவித்தார் கிம். இதனை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும், சர்வதேச அரங்கில் பரவலான அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலிலேயே, அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.
இதுபற்றி, நேற்று (ஜூன் 7) டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜூன் 12ஆம் தேதி சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் இயல்பு நிலையை அடையும் என்றார்.
“எல்லாம் சுமூகமாக முடிந்தபிறகு, இயல்பான உறவைப் பேணுதல் நடக்குமென எதிர்பார்க்கிறேன். இயல்பாக்கத்தையே நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்த மாநாடு வெற்றி பெற்றால், வடகொரியா பொருளாதாரரீதியாக எழுச்சி பெற அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்யும்” என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக